மீண்டும் ஒரு பெண்ணிடம் வடமாநில வாலிபர்கள் கைவரிசை; பாலிஷ் போடுவதாக கூறி 8½ சவரன் நகை கொள்ளை...

First Published Jun 9, 2018, 8:17 AM IST
Highlights
North indian youths theft 8 pounds jewelry said be polishing ...


திண்டுக்கல்

வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் தங்க நகைகளுக்கு பாலீஷ் போட்டு தருவதாக கூறி 8½ சவரன் நகையை வடமாநில வாலிபர்கள் திருடி சென்றுவிட்டனர். 

திண்டுக்கல் மாவட்டம், பாறைப்பட்டி எம்.கே.எஸ். நகரைச் சேர்ந்தவர் முகமது இப்ராகிம் (75). இவருடைய மனைவி ஆமினா பீவி (70). இவர்களின் மகன் முகமது சாதிக் (38) தோல் வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய மனைவி காமிலா பானு (30). 

இவர்கள் அனைவரும் எம்.கே.எஸ். நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஒன்றாக வசித்து வருகின்றனர். இரண்டு தளங்களைக் கொண்ட அந்த அடுக்குமாடி குடியிருப்பில் முதல் தளத்தில் உள்ள ஒரு வீட்டில் இவர்கள் வசிக்கின்றனர்.

நேற்று வியாபாரம் சம்பந்தமாக முகமது சாதிக் வெளியே சென்றுவிட்டார். முகமது இப்ராகிம் தொழுகை செய்வதற்காக பள்ளிவாசலுக்கு சென்றுவிட்டார். வீட்டில் ஆமினா பீவியும், காமிலா பானுவும் மட்டும் இருந்தனர். 

இந்த நிலையில் மதியம் 12.30 மணியளவில் 30 வயது மதிக்கத்தக்க இரண்டு வடமாநில வாலிபர்கள் அந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு வந்துள்ளனர்.  அவர்கள் முகமது சாதிக்கின் வீட்டுக்குச் சென்று ஆமினா பீவி, காமிலா பானு ஆகியோரிடம், பழைய கவரிங் நகைகளை கொடுத்தால் அதனை ‘பாலீஷ்’ போட்டு புதியதுபோல மாற்றித் தருவதாக கூறியுள்ளனர். 

இதனையடுத்து ஆமினா பீவி தான் அணிந்திருந்த கவரிங் சங்கிலி மற்றும் வளையலை கழற்றி அவர்களிடம் கொடுத்துள்ளார். அந்த வாலிபர்கள் ஒரு குக்கரில் வெந்நீர் கொண்டு வரும்படி கூறியதால் காமிலா பானுவும் வெந்நீர் கொடுத்துள்ளார்.

இதனையடுத்து அந்த வாலிபர்கள் வெந்நீரில் ஒரு பொடியை போட்டு கலக்கி, அதில் ஆமினா பீவி கொடுத்த நகைகளை போட்டுள்ளனர். அரை மணி நேரம் கழித்து எடுத்து பார்த்தபோது அந்த கவரிங் நகை பளபளவென்று மாறியிருந்தது. 

நாங்கள் தங்க நகைகளையும் ‘பாலீஷ்’ செய்து தருவோம் என்று அந்த வடமாநில வாலிபர்கள் கூறினர். இதனை நம்பி காமிலா பானு தான் அணிந்திருந்த சங்கிலி, வளையல், மோதிரம் என  8½ சவரன் நகைகளை கழற்றி கொடுத்துள்ளார்.

இதனையடுத்து இரண்டு வாலிபர்களில் ஒருவர், ஒரு பொருளை கீழே வைத்துள்ளதாகவும், அதனை எடுத்து வருவதாகவும் கூறி சென்றுவிட்டார். இதையடுத்து மற்றொரு வாலிபர் மீண்டும் வெந்நீர் போட்டுக் கொண்டு வரும்படி காமிலா பானுவிடம் கூறியுள்ளார். 

அவர் குக்கரை எடுத்துக்கொண்டு சமையலறைக்குள் சென்றவுடன், அந்த வாலிபர் நகையை எடுத்து கொண்டு வீட்டில் இருந்து தப்பியோடி விட்டார். 

இதனைப் பார்த்த ஆமினா பீவி கூச்சல் போட்டார். அக்கம்பக்கத்தினர் வருவதற்குள் அந்த இருவரும் தப்பியோடிவிட்டனர். 

பின்னர் இதுகுறித்து நகர் தெற்கு காவலாளர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவலாளர்கள் விசாரணை நடத்தினர். 

மேலும், இதுகுறித்து வழக்குப்பதிந்து இரண்டு வடமாநில வாலிபர்களையும் தீவிரமாக தேடி வருகின்றனர். 

சமீப காலமாக வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை குறிவைத்து வடமாநிலத்தை சேர்ந்த கொள்ளை கும்பல் தொடர்ந்து கொள்ளையில் ஈடுபட்டு வருகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்த வண்ணம் இருக்கிறது. 

இதுகுறித்த தகவல்களை கேள்விப்படும் பெண்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். எனவே, இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

click me!