
திருவள்ளூர்
திருவள்ளூரில் குழந்தைகளைக் கடத்த முயன்ற வட மாநில பெண்ணை சரமாரியாக அடித்து மக்களே பிடித்து காவலாளர்களிடம் ஒப்படைத்தனர்.
திருவள்ளூரை அடுத்த எறையூர் கிராமத்தைச் சேர்ந்த முருகன் - மஞ்சு தம்பதி அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் கூலித் தொழிலாளிகளாக பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு மகள் ருக்மணி (11) , மகன் பார்த்திபன்(9) ஆகியோர் உள்ளனர்.
இந்தத் தம்பதி கூலி வேலைக்குச் சென்றுவிடுவதால், குழந்தைகளுடன் அவரது பாட்டி மட்டும் வீட்டில் இருப்பார்.
இந்த நிலையில், புதன்கிழமை மாலை அப்பகுதியில் வட மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் பார்த்திபனையும், எதிர் வீட்டில் உள்ள குழந்தைகளையும் சைகை காட்டி அழைத்துள்ளார். அப்போது குழந்தைகள் வராததால் கையை பிடித்து அந்தப் பெண் இழுத்துள்ளார்.
இதனைக் கவனித்துக் கொண்டிருந்த ருக்மணி அருகில் இருந்தவரிடம் இருந்து செல்போனை வாங்கி 100 என்ற அவசர தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டுள்ளார். இதையறிந்த அப்பெண் அங்கிருந்து நழுவிச் சென்றுள்ளார்.
அப்போது வேலை முடிந்து வந்த பெற்றோரிடம் குழந்தைகள் நடந்த சம்பவம் குறித்து கூறியுள்ளனர். இதைத் தொடர்ந்து அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் அக்கம்பக்கத்தில் தேடிச் சென்றனர்.
அப்போது, அந்த வட மாநிலப் பெண் மற்றொரு வீட்டை நோட்டமிட்டிருந்த நேரத்தில் அவரை சுற்றிவளைத்துப் பிடித்து சரமாரியாக அடித்துள்ளனர். அதன்பின்னர், புல்லரம்பாக்கம் காவல் நிலையத்துக்கு மக்கள் தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில், அங்கு வந்த காவலாளர்கள், அந்தப் பெண்ணை மக்களிடம் இருந்து மீட்டு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து, அப்பெண் குழந்தைகள் கடத்தல் கும்பலை சேர்ந்தவரா? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.