
திருப்பூர்
சான்றிதழுக்காக கையெழுத்து பெற தொடர்ந்து 8 நாள்களாக வந்தும் நிலவருவாய் ஆய்வாளர் இல்லாததால் அங்கிருந்த தகவல் பலகையில் குறிப்பு எழுதிய இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர் வடக்கு தாலுகாவுக்கு உட்பட்ட ஆத்துப்பாளையம் பகுதியைச் சேர்ந்த மகேந்திரனின் மகன் மதன் (29). இவர் அதேப் பகுதியில் மளிகைக்கடை வைத்து நடத்தி வருகிறார்.
மதனின் தந்தை கடந்த 2016-ஆம் ஆண்டு இறந்துவிட்டதையடுத்து தனக்கு வாரிசு சான்றிதழ் வாங்குவதற்காக வேலம்பாளையம் கிராமநிர்வாக அலுவலரிடம் விண்ணப்பித்து, அதில் கையொப்பம் பெற்றார்.
இதனைத் தொடர்ந்து அவர் வேலம்பாளையம் நிலவருவாய் ஆய்வாளர் அலுவலகத்துக்கு சென்றுள்ளார். அங்கு நிலவருவாய் ஆய்வாளர் இல்லையாம். பலமுறை அங்கு சென்றும் நிலவருவாய் ஆய்வாளரை அவரால் சந்திக்க முடியவில்லை.
இந்த நிலையில் நேற்று காலை மீண்டும் நிலவருவாய் ஆய்வாளர் அலுவலகத்திற்கு மதன் சென்றுள்ளார். அப்போதும் நிலவருவாய் ஆய்வாளர் இல்லை. இதனால், ஆத்திரமடைந்த மதன், அங்குள்ள தகவல் பலகையில் நில வருவாய் ஆய்வாளருக்கு ஒரு குறிப்பை எழுதினார்.
அந்தக் குறிப்பில், "நிலவருவாய் ஆய்வாளர் அதிகாரி அவர்களே, இன்றோடு 8-வது நாளாக உங்களை பார்க்க வருகிறேன். நீங்கள் அலுவலகத்தில் இல்லை. நீங்கள் வரும் நேரத்தை எழுதி வைத்தால் மக்கள் அலைக்கழிக்கப்படுவது தவிர்க்கப்படுமே. இப்படிக்கு நீங்கள் வாங்கும் சம்பளத்தை வரியாக அளிக்கும் இந்திய குடிமகன்" என்று எழுதி வைத்துவிட்டு தனது பெயரையும், செல்போன் எண்ணையும் எழுதி வைத்துவிட்டு சென்றார்.
இதுபற்றி தகவல் அறிந்த நிலவருவாய் ஆய்வாளர் ராசு அங்கு விரைந்து வந்ததுடன், அந்த அறிவிப்பு பலகையில் மதன் எழுதிய குறிப்பை அளித்துவிட்டு, ‘ஆர்.ஐ. வருகை 5 மணி’ என்று எழுதினார். மேலும், மதனை அழைத்து, அவருடைய விண்ணப்பத்தில், வாரிசு சான்றிதழ் அளிப்பதற்காக தாசில்தாருக்கு பரிந்துரை செய்து கையெழுத்தும் போட்டுக் கொடுத்தார்.
இந்தச் சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.