
டிடிவி தினகரனால் நியமிக்கப்பட்ட கட்சிப் பதவிகள் செல்லாது எனக்கூறும் அமைச்சர் ஜெயக்குமார், சசிகலாவால் அவை தலைவராக நியமிக்கப்பட்ட செங்கோட்டையன், பொருளாளராக நியமிக்கப்பட்ட திண்டுக்கல் சீனிவாசனின் பதவிகள் செல்லாது என கூறமுடியுமா என பெருந்துறை எம்.எல்.ஏ தோப்பு வெங்கடாசலம் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதிமுகவில் அக்கட்சியின் பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவிற்கு பிறகு பல்வேறுகட்ட குழப்பங்களும் கருத்து வேறுபாடுகளும் நிலவி வருகின்றன.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அணிக்கும் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல்கள் நாளுக்கு நாள் வலுத்து கொண்டே போகிறது.
இதனிடையே டிடிவி தினகரன் குறித்து, அமைச்சர் ஜெயக்குமார் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார்.
சில நாட்களுக்கு முன்பு டிடிவி தினகரன் கட்சியின் புதிய பொறுப்பாளர்களை நியமனம் செய்தார். இதற்கு எடப்பாடி தரப்பில் பெரிதும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இதைதொடர்ந்து நிதியமைச்சர் ஜெயக்குமார் டிடிவியின் துணை பொதுச்செயலாளர் பதவியே செல்லத போது அவர் நியமனம் செய்த பதவிகள் மட்டும் எப்படி செல்லும் என கலாய்த்தார்.
இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த பெருந்துறை எம்.எல்.ஏ தோப்பு வெங்கடாசலம், டிடிவி தினகரனால் நியமிக்கப்பட்ட கட்சிப் பதவிகள் செல்லாது எனக்கூறும் அமைச்சர் ஜெயக்குமார், சசிகலாவால் அவை தலைவராக நியமிக்கப்பட்ட செங்கோட்டையன், பொருளாளராக நியமிக்கப்பட்ட திண்டுக்கல் சீனிவாசனின் பதவிகள் செல்லாது என கூறமுடியுமா என கேள்வி எழுப்பினார்.