இனிவரும் காலங்களில் போட்டி தேர்வின்றி எந்த வேலையும் கிடைக்காது - திருவண்ணாமலை ஆட்சியர் அறிவுரை...

 
Published : Jan 19, 2018, 09:01 AM ISTUpdated : Sep 19, 2018, 01:50 AM IST
இனிவரும் காலங்களில் போட்டி தேர்வின்றி எந்த வேலையும் கிடைக்காது  -  திருவண்ணாமலை ஆட்சியர் அறிவுரை...

சுருக்கம்

No more work without competition in the future - Thiruvannamalai Collector advise...

திருவண்ணாமலை

இனிவரும் காலங்களில் போட்டி தேர்வின்றி எந்த வேலையும் கிடைக்கப்போவது இல்லை என்று திருவண்ணாமலை கலைக் கல்லூரியில் நடைபெற்ற கருத்தரங்கில் ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்தார்.

திருவண்ணாமலை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் மற்றும் அரசினர் கலைக் கல்லூரி இணைந்து தொழில் நெறி வழிகாட்டும் புத்தகக் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு கல்லூரி வளாகத்தில் நடத்தியது.

இந்த கருத்தரங்கிற்கு மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் விஜயா தலைமை வகித்தார். சென்னை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக துணை இயக்குனர் சந்திரன் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் சின்னையா வரவேற்றார்.

இந்த கருத்தரங்கிற்கு சிறப்பு அழைப்பாளராக ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி பங்கேற்று கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.

அதன்பின்னர் அவர் பேசியது, "மற்ற கல்லூரி மாணவர்களைவிட கலைக் கல்லூரி மாணவர்கள் மிகவும் புத்துணர்ச்சியுடன் மகிழ்ச்சியுடன் காணப்படுவார்கள். கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வெளியே செல்லும் மாணவர்கள் தங்களுக்கு என்று ஒரு இலக்கை அமைத்து கொள்ள வேண்டும்.

வாழ்க்கையில் நமக்கு என்று ஒரு அடையாளத்தை உருவாக்க வேண்டும். இதுவரை பெற்றோர், காப்பாளர்களின் நிழலில் தங்கள் வாழ்க்கை கழிந்துவிட்டது. தற்போது சரியான முடிவை எடுக்க வேண்டிய காலம் இது.

இனிவரும் காலங்களில் போட்டி தேர்வின்றி எந்த வேலையும் கிடைக்கப்போவது இல்லை. போட்டி தேர்வுகளில் வெற்றி பெற வேண்டும் என்றால் கடின உழைப்பு அவசியம். கடின உழைப்பு என்பது அறிவு சார்ந்ததாகவும், உடல் சார்ந்ததாகவும் இருக்க வேண்டும். எந்த காரியத்தை செய்தாலும் திட்டமிட்டு செய்ய வேண்டும்.

நாம் பொருட்களை தரம் பார்த்து வாங்கிய காலம் போய், மனிதர்களை தரம் பார்க்கும் காலம் வந்துவிட்டது. நாம் பிறந்தது, நமக்காக மட்டுமில்லை. பிறருக்காகவும் தான், அதனை மனதில் வைத்து கொண்டு நாம் நல்ல நிலைக்கு வர எண்ணுதல் வேண்டும்.

போட்டி தேர்வுக்கு படிப்பவர்கள் முதலில் மாதிரி வினாக்களை படிப்பதை தவிர்க்க வேண்டும். ஒருமுறை போட்டி தேர்வில் தோல்வி அடைந்தால் அதனை அப்படியே விட்டுவிட கூடாது. போட்டி தேர்வில் வெற்றி பெறும் வரை விடா முயற்சியுடன் இருக்க வேண்டும். விடா முயற்சியுடன் செயல்பட்டால் இலக்கை எளிதாக அடையலாம்" என்று பேசினார்.

கருத்தரங்கின் இறுதியில் திருவண்ணாமலை இளநிலை வேலை வாய்ப்பு அலுவலர் காஞ்சனா நன்றித் தெரிவித்தார். 

PREV
click me!

Recommended Stories

வாக்காளர் பட்டியல் வெளியீடு, 6.5 லட்சம் பேர் நீக்கம் மொத்தம் 32,25,198 வாக்காளர்கள்
களத்திற்கே வராத விஜய் களம் குறித்து பேசுவது நகைச்சுவையாக உள்ளது - சீமான் பேட்டி