
ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு முறைக்கு ஆதரவும் எதிர்ப்பு உள்ள நிலையில் இன்று நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் பல்வேறு பொருட்களுக்கு விலை உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் விபூதி மற்றும் பஞ்சாமிர்தத்துக்கு ஜி.எஸ்.டி. வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படடுள்ளதாக வணிகவரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வணிகவரித்துறை சார்பில் ஜி.எஸ்.டி. கருத்தரங்கு பழனியில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் நடைபெற்றது. இதில், திண்டுக்கல் வணிகவரித்துறை உதவி ஆணையர்கள் முத்துகிருஷ்ணன், சங்கீதா, பழனி வணிக வரித்துறை உதவி ஆணையர் சிவக்குமார், ஆறுமுகராஜ், வணிகவரித்துறை ஆய்வாளர் லலித்மோகன் மிஸ்ரா, கண்காணிப்பாளர் ஹேமலதா வெங்கட் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த கருத்தரங்கின்போது, ஜி.எஸ்.டி. வரி குறித்து பொதுமக்களுக்கும், வியபாரிகளுக்கும் ஏற்படும் சந்தேகங்களுக்கு அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். அதற்கு அதிகாரிகளும் உரிய விளக்கங்களை அளித்தனர்.
அப்போது பொதுமக்களில் சிலர் பழனி பஞ்சாமிர்தம் மற்றும் விபூதி குறித்து கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த வணிகவரித்துறை அதிகாரி சிவக்குமார், பூஜை பொருளாகவும், பிரசாதமாகவும் விளங்கும் விபூதி மற்றும் பஞ்சாமிர்தத்துக்கு ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு கிடையாது என்று கூறினார்.