தமிழக நலனுக்கு எதிரான மத்திய அரசை தடுக்காமல் அதன் வேட்பாளரை தமிழக அரசு ஆதரிக்கிறது - ஜி.ராமகிருஷ்ணன்

 
Published : Jul 01, 2017, 10:56 AM ISTUpdated : Sep 19, 2018, 12:49 AM IST
தமிழக நலனுக்கு எதிரான மத்திய அரசை தடுக்காமல் அதன் வேட்பாளரை தமிழக அரசு ஆதரிக்கிறது - ஜி.ராமகிருஷ்ணன்

சுருக்கம்

Tamil Nadu government supports its candidate without blocking the central government against Tamil Nadu interests - G Ramakrishnan

தமிழ்நாட்டின் நலனுக்கு எதிராக பல முடிவுகளை எடுக்கும் மத்திய அரசை தடுக்கவோ, எதிர்க்கவோ நடவடிக்கை எடுக்காமல் குடியரசுத் தலைவர் தேர்தலில் தமிழக அரசு பாஜக வேட்பாளரை ஆதரிக்கிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தினார்.

கடலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பயிற்சி வகுப்பு நடைப்பெற்றது. இதில் பங்கேற்ற ஜி.ராமகிருஷ்ணன், செய்தியாளர்களிடம் கூறியது:

“குட்கா, பான் மசாலா உற்பத்தி, விற்பனைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், தமிழகத்தில் அவற்றின் விற்பனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக குட்கா நிறுவனங்களில் வருமான வரித் துறையினர் நடத்திய சோதனையின் போது கிடைத்த குறிப்பேட்டில், ஆண்டுக்கு ரூ.40 கோடி தமிழக சுகாதாரத் துறை அமைச்சர், தமிழக அரசின் தலைமைச் செயலர், காவல்துறை, சுகாதாரத் துறை, உணவுப் பாதுகாப்பு துறையினருக்கு லஞ்சமாகக் கொடுத்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குட்காவுக்கு அனுமதி அளிக்கப்பட்டதில் மிகப் பெரிய முறைகேடு நடந்துள்ளதையே இது வெளிப்படுத்தியுள்ளது. தடை செய்யப்பட்ட பொருளுக்கு எப்படி அனுமதி வழங்கப்பட்டது. எனவே, சுகாதாரத் துறை அமைச்சர் தனது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும். அல்லது தமிழக முதல்வர் அவரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும். இதில் தொடர்புடைய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதோடு, உயர்நிலை விசாரணைக்கும் உத்தரவிட வேண்டும்.

ஜிஎஸ்டி வரியால் பல தரப்பினரும் பாதிக்கப்படுவர். இதில், ஏற்கெனவே வரி விலக்குப் பட்டியலில் இருந்த 59 பொருள்களுக்கு வரி விதிக்கப்பட்டுள்ளது. சில பொருள்களுக்கு வரியை 14 சதவீதத்திலிருந்து 28 சதவீதமாக உயர்த்தியுள்ளனர். இந்த முறையினால் மருந்து, பட்டாசு, ஜவுளித் தொழில், திரைப்படத் தொழில் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்படுவர். எனவே, ஜிஎஸ்டி வரியை அமல்படுத்துவதற்கு கால அவகாசம் அளிப்பதோடு, வரியைப் பெருமளவு குறைக்க வேண்டும்.

என்எல்சி நிறுவனத்தில் பழுப்பு நிலக்கரியை அதிகளவில் வெட்டி எடுத்து சேமித்து வைப்பதால் 2-ஆவது முறையாக தீ விபத்து ஏற்பட்டு கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான நிலக்கரி எரிந்து நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தேவைக்கு அதிகமாக நிலக்கரியைச் சேமித்து வைப்பதால் முறைகேடு நடைபெற வாய்ப்புள்ளது. எனவே, இதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என சிஐடியூ வலியுறுத்தியுள்ளதை வழிமொழிகிறேன்.

பொதுத் துறை நிறுவனங்களான சேலம் உருக்கு ஆலை, எண்ணூர் காமராஜர் துறைமுகம், திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை ஆகியவற்றை தனியார்மயமாக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு இறங்கியுள்ளது. பாதுகாப்பு சம்பந்தப்பட்ட துறைகளை தனியார் மயமாக்கக் கூடாது. மத்திய அரசு தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

தமிழ்நாட்டில் நடைபெற்ற வருமான வரித் துறை சோதனைகளில் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்காமல், சம்பந்தப்பட்டவர்களை மிரட்டும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.

நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கக் கோரி தமிழக அரசு நிறைவேற்றிய மசோதாவை, குடியரசுத் தலைவருக்கு அனுப்பி நிறைவேற்றுவதற்கு மத்திய அரசு எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. குடியரசுத் தலைவரின் செயலர் அனுப்பியுள்ள பதில் கடிதத்தில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடியரசுத் தலைவர் தேர்தலில் அதிமுகவின் மூன்று அணியினரும் பாஜக வேட்பாளருக்கு
ஆதரவு அளிக்கின்றனர். தமிழ்நாட்டின் நலனுக்கு எதிராக பல முடிவுகளை மத்திய அரசு எடுக்கும்போது அவற்றைத் தடுக்கவோ, எதிர்க்கவோ மாநில அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழகத்துக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய ரூ.16 ஆயிரத்து 900 கோடியை முதல்வர் கேட்டுப்பெற வேண்டும்” என்று அவர் கூறினார்.

இந்தப் பேட்டியின்போது கட்சியின் மாவட்டச் செயலர் டி.ஆறுமுகம், செயற்குழு உறுப்பினர்கள் வி.சுப்புராயன், எஸ்.திருஅரசு ஆகியோர் உடனிருந்தனர்.

PREV
click me!

Recommended Stories

Tamil News Live today 21 December 2025: மீண்டும் வெடித்த வன்முறை.. பெண்கள் மீது தொடர் தாக்குதல்.. வங்கதேசத்தில் பரபரப்பு
டெட் தேர்வில் திருப்பம்! சிறுபான்மை பள்ளிகளுக்கு இனி அந்த கவலை இல்லை.. முதல்வர் போட்ட அதிரடி கையெழுத்து!