
ஏரியில் மண் எடுத்துக் கொள்ள இலவச அனுமதி கிடைக்குமா என மண்பாண்டத் தொழிலாளர்கள் காத்திருக்கின்றனர்.
சமையல், தண்ணீர், விளக்குகள், கால்நடைகளுக்கு தண்ணீர் உள்ளிட்ட அனைத்துவகை தேவைகளுக்கும் மண்பாண்டங்களையே முந்தைய தலைமுறையினர் பயன்படுத்தி வந்தனர். ஆனால், பீங்கான், பிளாஸ்டிக், எவர்சில்வர் உள்ளிட்ட சீனப் பொருள்களின் ஆதிக்கத்தால், மண்பாண்டங்கள் பயன்பாடு என்பது அரிதாகிவிட்டன.
ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் குடும்பம், குடும்பமாக இந்த தொழிலில் ஈடுபட்டு வந்த நிலை மாறி, தற்போது வெகுசிலர் மட்டுமே இத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
தருமபுரி மாவட்டத்தில், பென்னாகரம் அருகேயுள்ள நல்லப்பரம்பட்டி கிராமத்தில் சுமார் 35 குடும்பங்களும், பாப்பாரப்பட்டில் 80 குடும்பத்தினரும், நாய்க்கன் கொட்டாயை அடுத்த கிருஷ்ணாபுரத்தில் 30-க்கும் மேற்பட்ட குடும்பங்களும் பாரம்பரியம் மாறாது, மண்பாண்டங்கள் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதைத் தவிர, அதியமான்கோட்டை, மாதேமங்கலம் என பரவலாக ஆங்காங்கே ஒருசில குடும்பங்களும் இத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் தற்போது, மண் அடுப்பு, சமையலுக்குப் பயன்படுத்தும் பானைகள், விளக்குகள், பூந்தொட்டிகள், கால்நடைகள் தண்ணீர் அருந்தும் தொட்டிகள், உண்டியல்கள், ஓடு உள்ளிட்ட பொருள்களை உற்பத்தி செய்து வருகின்றனர்.
இதில் பானைகள் பொங்கல் திருவிழாவையொட்டியும், அகல்விளக்குகள் கார்த்திகை தீபத் திருநாளையொட்டியும் தயாரித்து விற்பனை செய்யப்படுகின்றன. இத்திருவிழாக்களுக்கு ஒரு சில வாரங்களுக்கு முன்பே இப் பொருள்கள் தயாரிக்கும் பணியைத் தொடங்கி விடுகின்றனர். இதன் மூலம் ஓரளவு அவர்களுக்கு வருவாய் கிடைக்கிறது.
இதுதவிர, மண் அடுப்புகள், பூந்தொட்டிகள் உள்ளிட்டவற்றை ஆண்டு முழுவதும் பரவலாக உற்பத்தி செய்து, அருகிலுள்ள சந்தைகளுக்கு அனுப்பி விற்பனை செய்கின்றனர். ஏற்கெனவே, மண்பாண்டங்கள் பயன்பாடு குறைந்ததால், பல்வேறு சவால்கள் மற்றும் சிரமங்களுடன் இத் தொழிலில் ஈடுபட்டுள்ள இவர்களுக்கு, மண் எடுப்பதிலும் தற்போது மிகப் பெரிய சிரமம் ஏற்பட்டுள்ளது.
பாப்பாரப்பட்டியில் உள்ள மண்பாண்டத் தொழிலாளர்கள் அங்குள்ள பாப்பாரப்பட்டி பெரிய ஏரியிலும், நல்லம்பரம்பட்டி கிராமத்தில் உள்ள தொழிலாளர்கள் அங்குள்ள கெம்பன்குட்டை ஏரி மற்றும் அவரவர் சொந்த கிராமங்களுக்கு அருகிலுள்ள ஏரியிலிருந்தும் மண் எடுத்து வந்தனர்.
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஏரியில் மண் எடுக்க, வருவாய் துறையினர் குறிப்பிட்ட தொகையைக் கட்டணமாகப் பெற்றுக் கொண்டு அனுமதி அளித்தனர்.
ஆனால், தற்போது கனிம வள சட்டங்களைக் காரணம் காட்டி, வருவாய் துறையினர் ஏரிகளில் மண் எடுக்க அனுமதி மறுத்து வருவதாகக் கூறப்படுகிறது. இதனால், ஏற்கெனவே பல்வேறு சிரமங்களுக்கிடையே இத் தொழிலில் ஈடுபட்டு வருவோர் மேலும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
எனவே, மண்பாண்டத் தொழிலாளர்களுக்கு ஒவ்வோர் ஆண்டும் மண்பாண்டங்களை தயாரிக்கத் தேவையான மண்ணை அந்தந்தப் பகுதிகளில் உள்ள ஏரிகளில் எடுத்துக் கொள்ள இலவசமாக உரிமம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை தற்போது வலுப்பெற்றுள்ளது.
இதற்கான, நடவடிக்கையை தருமபுரி மாவட்ட நிர்வாகம் எடுத்து, மண்பாண்டத் தொழிலாளர்களின் வாழ்வில் ஒளி ஏற்றிட வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
இதுகுறித்து நலப்பரம்பட்டியைச் சேர்ந்த மண்பாண்டத் தொழிலாளி கணேசன் கூறியது: “மண்பாண்டங்கள் தயாரிக்கத் தேவையான மண் எந்த ஏரியில் கிடைக்கிறதோ, அந்த ஏரியில் மண் எடுத்துக் கொள்ள எங்களுக்கு இலவசமாக அனுமதி வழங்க வேண்டும்.
அதேபோல, மண் சேமித்து வைத்துக் கொள்ள மேற்கூரையுடன் கூடிய இடம் ஒதுக்கித் தர வேண்டும். மேலும், மழைக்கால நிவாரணம் ஆண்டுதோறும் தங்குதடையின்றி கிடைக்க வேண்டும். எங்களது தொழிலை சிரமமின்றித் தொடர கூட்டுறவு வங்கிகளில் நிபந்தனையின்றி கடன் வழங்கிட வேண்டும். இக்கோரிக்கையை வலியுறுத்தி வரும் அக்டோபர் 24-ஆம் தேதி தருமபுரி மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளிக்க உள்ளோம்” என்று கூறினார்.