
மகாத்மா காந்தி கிராமப்புற வேலை உறுதித் திட்ட ஊதியத்துக்கான நிதியை விடுவிக்காமல் இருக்கும் மத்திய அரசைக் கண்டித்து, வெள்ளிக்கிழமை தருமபுரியில் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டது.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்திற்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவர் சோ.அருச்சுனன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் எம்.முத்து, பொருளர் இ.கே.முருகன், சிஐடியு மாவட்டத் தலைவர் எம்.மாரிமுத்து, விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலர் கே.என்.மல்லையன், ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்டச் செயலர் எஸ்.கிரைஸாமேரி, வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் டி.வேலாயுதம் உள்ளிட்டோர் பேசினர்.
கிராமப்புற வேலை உறுதித் திட்டத்துக்கான ஊதிய நிதியை மத்திய அரசு உடனே விடுவிக்க வேண்டும்; தமிழக அரசு இத்திட்டத்துக்கான வேலை நாள்களை 150 நாள்களாக நீட்டிக்க வேண்டும்; தருமபுரி மாவட்டத்தில் இந்தத் திட்டத்தில் நடைபெறும் முறைகேடுகளை தீவிரமாகக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்; என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.