தேர்வு கட்டணம் செலுத்த தேவையில்லை... தேர்வுத்துறையின் சூப்பர் சலுகை!!

By Narendran SFirst Published Jan 4, 2022, 5:45 PM IST
Highlights

தமிழ் வழியில் படிக்கும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் தேர்வு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக தேர்வுகள் இயக்குனரகம் அறிவித்துள்ளது. 

தமிழ் வழியில் படிக்கும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் தேர்வு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக தேர்வுகள் இயக்குனரகம் அறிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக தற்போது 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. எஸ்எஸ்எல்சி மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு கண்டிப்பாக பொதுத்தேர்வு கட்டாயம் நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்திருந்தார். இதற்கேற்ப பள்ளிகளில் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் மாணவர்களுக்கு ஏப்ரல் கடைசி வாரத்திலோ அல்லது மே மாதம் முதல் வாரத்திலோ தேர்வுகள் நடைபெறும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியிருந்தார். ஜனவரி மாதம் மூன்றாவது வாரத்தில் முதல் திருப்புதல் தேர்வு நடைபெறும் என்றும் மார்ச் மாதம் இறுதி வாரத்தில் இரண்டாவது திருப்புதல் தேர்வு நடைபெறும் என்றும் கூறப்பட்டிருந்தது.

மாணவர்கள் தேர்வுக்கு தயாராகும் வகையில் தற்போது தமிழகம் முழுவதும் 15 வயது முதல் 18 வயதுடைய சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. எனவே நேரடியாக பொதுத்தேர்வு நடைபெறும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்திருந்தார். 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களிடம் தேர்வு கட்டணத்தை வசூலித்து ஜனவரி 20க்குள் ஆன்லைனில் செலுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் தமிழ் வழியில் படிக்கும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் தேர்வு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக தேர்வுகள் இயக்குனரகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து அரசு தேர்வுகள் இயக்குனரக இயக்குநர் சேதுராம வர்மா வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ் வழியில் படிக்கும் 12 மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இதேபோல் கண் பார்வையற்றவர்கள், காது கேளாதவர்கள், வாய் பேச முடியாதவர்களுக்கும் தேர்வு கட்டணம் கிடையாது என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் எம்.பி.சி, பட்டியல் இன மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் கிடையாது. பெற்றோர் ஆண்டு வருவாய் ரூ.2.5 லட்சத்திற்கும் குறைவான பி.சி. மாணவர்களுக்கும் தேர்வு கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆங்கில வழியில் படிப்பவர்களுக்கு தேர்வு கட்டணம் உண்டு எனவும் சுயநிதி, மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ இந்திய பள்ளிகளில் பயிலும் 12ம் வகுப்பு மாணவர்கள் தேர்வு கட்டணம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

click me!