நிர்மலா சீதாராமன் சொல்வது பச்சை பொய்: ஆர்.எஸ் பாரதி பதிலடி!

By Manikanda Prabu  |  First Published Dec 22, 2023, 4:57 PM IST

நிர்மலா சீதாராமன் பச்சை பொய் சொல்வதாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்


தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக ஏற்பட்ட வரலாறு காணாத பெருமழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பலத்த சேதங்கள் ஏற்பட்டன.  இந்த இயற்கைப் பேரிடரால் ஏறத்தாழ ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டனர்.

மிக்ஜாம் புயலா ஏற்பட்ட பாதிப்புகளை சீரமைக்கும் பணியில் தமிழக அரசு முழு வீச்சில் செயல்பட்டுக் கொண்டிருந்த நிலையில், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் வரலாறு காணாத கனமழை பெய்தது. இதனால், ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் அம்மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

Tap to resize

Latest Videos

தமிழகத்தில் ஏற்பட்ட கனமழை, வெள்ளத்தை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், மிக்ஜாம் புயல் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை மட்டும் சீர்செய்திட தற்காலிக நிவாரணத் தொகையாக 7033 கோடி ரூபாயும், நிரந்தர நிவாரணத் தொகையாக 12,659 கோடி ரூபாயும் வழங்கிடவும், தென் மாவட்டங்களுக்கு மட்டும் 2000 கோடி ரூபாயை முதல் கட்டமாக வழங்க வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த நிலையில், தென் மாவட்டங்களில் பெய்த கனமழை, வெள்ள பாதிப்பு, நிவாரண பணிகளில் மத்திய அரசின் பணிகள், தமிழ்நாட்டுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை உள்ளிட்டவை குறித்து டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், தமிழகத்தில் ஏற்பட்ட மழை, வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க இயலாது என திட்டவட்டமாக தெரிவித்தார். சென்னை வானிலை மையம் அதிநவீனமானது எனவும் உரிய வானிலை முன்னெச்சரிக்கையை வழங்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.

கனமழை பெய்யும் என்று ரெட் அலர்ட் கொடுத்த பிறகு, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதையும் எடுக்காமல் இருந்தது ஏன் என கேள்வி எழுப்பிய நிர்மலா சீதாராமன், பேரிடர் மீட்புக் குழுவினர் பணியில் இறங்குவதற்கு முன்பு, தமிழக அதிகாரிகள் ஒருவர் கூட அங்கு இல்லை; பாதிக்கப்ட்ட இடங்களுக்கு அமைச்சர்களும் அதிகாரிகளும் தாமதமாகவே சென்றனர் என குற்றம் சாட்டினார்.

மேலும், “சென்னையில் புயல் பாதிப்புக்கு முன்னர், ரூ.4 ஆயிரம் கோடி செலவு செய்ததாக கூறினர். ஆனால், சென்னை மழைக்கு பிறகு இது மாறியது. 92 சதவீத பணிகள் முடித்ததாக கூறியவர்கள், பிறகு 42 சதவீத பணிகள் தான் முடிந்தது என்றனர். 42 சதவீத பணிகள் செய்ததாக கூறுவதும் நிஜம் தானா என்ற கேள்வி எழுகிறது? சென்னையில் வெள்ளத்தடுப்பு நடவடிக்கைக்காக செலவு செய்ததாக கூறிய 4 ஆயிரம் கோடி ரூபாய் என்ன ஆனது?” எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

நாடாளுமன்றத் தாக்குதலின்போது பாஜக எம்.பி.க்கள் ஓடிவிட்டனர்: ராகுல் காந்தி!

இதற்கு பதிலடி கொடுத்துள்ள திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, நிர்மலா சீதாராமன் பச்சை பொய் சொல்வதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “நிர்மலா சீதாராமன் சார்ந்து இருக்கக்கூடிய கட்சி எந்த காலத்திலும் உண்மையை பேசியது கிடையாது. எனவே தற்போது அவர் பேசியிருப்பது பல பொய்களில் ஒன்று. முன்கூட்டியே போதுமான எச்சரிக்கை வழங்கப்படவில்லை என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால் எச்சரிக்கை வழங்கப்பட்டு விட்டது என கூறுகிறார். இது பச்சை பொய். தமிழ்நாட்டை சேர்ந்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழ்நாட்டுக்கு கூடுதலாக நிதி வாங்கித்திருந்த வேண்டும். அப்படி செய்யாதது வருத்தம் அளிக்கிறது. அவர் இவ்வாறு பேசுவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதை போல இருக்கிறது.” என்றார்.

“அரசியல் பேசுவதற்கு இது நேரமில்லை. தமிழ்நாட்டு மக்கள் தத்தளிக்கிறார்கள். குஜராத்திற்கு ஓடோடி சென்று கேட்காமலேயே நிதி உதவி செய்யக்கூடிய ஒன்றிய அரசு, தமிழ்நாட்டுக்கு கேட்ட பின்னரும் போதுமான நிதி வழங்காததற்கான காரணம் என்ன?” எனவும் ஆர்.எஸ்.பாரதி கேள்வி எழுப்பியுள்ளார்.

“ரூ.கோடி என்ன ஆனது என்பதை மனசாட்சி உள்ளவர்கள் அறிவார்கள். இந்தத் தொகை செலவிடாமல் இருந்திருந்தால் இன்று சென்னை காப்பாற்றப்பட்டிருக்காது. இது தொடர்பாக வெளிப்படையான அறிக்கை கொடுப்பதற்கு கூட அரசு தயாராக இருக்கிறது.” என்று  அவர் தெரிவித்தார்.

click me!