ஸ்டாலின் கேட்ட NDRF நிதி குறித்து வாய் திறக்காத நிர்மலா சீதாராமன்!

By Manikanda PrabuFirst Published Dec 22, 2023, 3:12 PM IST
Highlights

கனமழை பாதிப்புக்களை சீர் செய்திட தேசிய பேரிடர் நிவாரண நிதியை முதல்வர் ஸ்டாலின் கோரிய நிலையில், அதுகுறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளிக்கவில்லை

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக ஏற்பட்ட வரலாறு காணாத பெருமழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பலத்த சேதங்கள் ஏற்பட்டதன் தொடர்ச்சியாக, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பெய்த வரலாறு காணாத கனமழையால் அம்மாவட்டங்களும் பெரும் சேதத்தை சந்தித்துள்ளன.

இதனால், ஏற்பட்ட இழப்பீடுகளை சரி செய்ய மத்திய அரசிடம் முதல்வர் ஸ்டாலின் நிதி கோரியுள்ளார். மிக்ஜாம் புயல் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை மட்டும் சீர்செய்திட தற்காலிக நிவாரணத் தொகையாக 7033 கோடி ரூபாயும், நிரந்தர நிவாரணத் தொகையாக 12,659 கோடி ரூபாயும் வழங்கிட முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால், மத்திய அரசு ரூ.450 கோடியை விடுவித்துள்ளது. அதேபோல், தென் மாவட்டங்களுக்கு மட்டும் 2000 கோடி ரூபாயை முதல் கட்டமாக வழங்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கேட்டுள்ளார். அதற்கு மத்திய அரசு இன்னும் நிதி அளிக்கவில்லை.

Latest Videos

இருப்பினும், தமிழ்நாட்டில் நிகழ்ந்துள்ள இரண்டு பெரிய வெள்ள பாதிப்புகளுக்குத் தேவைப்படும் நிதியினை தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உடனடியாக வழங்கிட முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார். ஆனால், தமிழ்நாட்டுக்கு இதுவரை ரூ.900 கோடியை கொடுத்துள்ளதாக மத்திய அரசு கூறுகிறது.

இன்றைய தினம் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த நிர்மலா சீதாராமனிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “நிதியாண்டின் தொடக்கத்தில் தமிழ்நாட்டிடம் பேரிடர் நிதியாக ரூ.813.15 கோடி இருந்தது. இந்த ஆண்டு தமிழகத்துக்கு வழங்க வேண்டிய பேரிடர் நிதி ரூ.900 கோடியை மத்திய அரசு முன்கூட்டியே வழங்கிவிட்டது. இந்த ஆண்டில் கொடுக்க வேண்டிய ரூ.900 கோடி தவணையில் இருந்து முதல் தவணையாக ஏப்ரல் மாதம் ரூ.450 கோடியும், இரண்டாவது தவணையாக டிசம்பர் 12ஆம் தேதி ரூ. 450 கோடியும் வழங்கப்பட்டது.” என தெரிவித்துள்ளார்.

நிர்மலா சீதாராமன் கூறிய இந்த தொகையை மத்திய அரசு விடுவித்து விட்டதாக ஏற்கனவே முதல்வர் ஸ்டாலினும் தெரிவித்துள்ளார். அதாவது, மாநில பேரிடர் நிவாரண நிதியில் தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு அளிக்க வேண்டிய பங்கான ரூ.900 கோடியை இரண்டு தவணைகளாக அளித்துள்ளதே தவிர, கூடுதல் நிதியாக எதுவும் வழங்கப்படவில்லை என்பதே முதல்வர் ஸ்டாலின் சுட்டிக்காட்டும் விஷயம். மேலும், தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து தமிழ்நாட்டின் பாதிப்புக்கு நிதி விடுவிக்க வேண்டும் என்பதே அவரது கோரிக்கையாக உள்ளது.

ஆனால், நிர்மலா சீதாராமன் மாநில பேரிடர் நிவாரண நிதி (SDRF) பற்றி மட்டுமே பேசியுள்ளாரே தவிர, தேசிய பேரிடர் நிவாரண நிதி (NDRF) பற்றி பேசவில்லை. அதுகுறித்து செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பக்கத்தில் அமர்ந்திருந்த அதிகாரியை பதிலளிக்குமாறு கைகாட்டி விட்டு நிர்மலா சீதாராமன் நழுவி விட்டார். அதுபற்றி பதிலளித்த அந்த அதிகாரி, தேசிய பேரிடர் நிவாரண நிதிக்கு ஏராளமான நடைமுறைகள் இருப்பதாக கூறி மழுப்பல் பதிலை அளித்துள்ளார்.

SDRF, NDRF என்ன வித்தியாசம் எளிமையான விளக்கம்


இயற்கைப் பேரிடர்களால் ஏற்படும் செலவுகளை சமாளிப்பதற்காக ஒவ்வொரு மாநிலத்திற்கும் மாநில பேரிடர் நிவாரண நிதி (SDRF) என்ற நிதி உள்ளது. எந்தெந்த மாநிலத்திற்கு இந்த நிதி எவ்வளவு என்பதை ஐந்தாண்டு காலத்திற்கு ஒருமுறை மத்திய அரசால் நியமிக்கப்படும் நிதிக் குழு (Finance Commission) தீர்மானிக்கிறது.

அதன்படி, தமிழ்நாட்டினுடைய SDRF-க்கு ஒவ்வொரு ஆண்டும் ஒதுக்கப்பட்டுள்ள நிதி ரூ.1,200 கோடி ஆகும். இதில் 75 விழுக்காட்டை, அதாவது ரூ. 900 கோடியை மத்திய அரசு தரவேண்டும். 25 விழுக்காட்டை, அதாவது ரூ.300 கோடியை தமிழ்நாடு அரசு ஏற்றிடவேண்டும். மத்திய அரசின் பங்கானது ஆண்டுதோறும் இரு தவணைகளில் தமிழ்நாட்டுக்கு அளிக்கப்படும். அதாவது இரண்டு தடவை தலா ரூ.450 கோடி அளிக்கப்படும். இதனைத்தான் மத்திய அரசு அளித்துள்ளது.

தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது; ரூ.4000 கோடி எங்கே? நிர்மலா சீதாராமன் சரமாரி கேள்வி!

ஒரு இயற்கைப் பேரிடரின் தாக்கம் மிகக் கடுமையாக இருக்கும்போது இந்த SDRF நிதி போதவில்லை என்றால், அந்த இயற்கைப் பேரிடரைக் கடும் இயற்கைப் பேரிடராக அறிவித்து தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து (NDRF) கூடுதல் நிதி ஒதுக்கப்படும். இதனைத்தான் முதல்வர் ஸ்டாலின் கோரி வருகிறார்.

சென்னையில் ஏற்பட்ட பெருவெள்ளத்தையும், தற்போது தென் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத வெள்ளத்தையும், இவ்வாறு கடும் பேரிடர்களாக அறிவித்து NDRFஇல் இருந்து கூடுதல் நிதி ஒதுக்கிட வேண்டும் முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்து வருகிறார். ஆனால் இன்று வரை இந்த இரண்டு பேரிடர்களும் கடும் பேரிடர்களாக அறிவிக்கப்படவில்லை. NDRF-இல் இருந்து இதுவரை தமிழ்நாட்டுக்கு கூடுதல் நிதி எதுவும் ஒதுக்கீடு செய்யப்படவும் இல்லை.

மத்திய அரசு இப்போது விடுவித்த ரூ.450 கோடி, அதற்கு முன்பு விடுவித்த ரூ.450 கோடி நிதி என்பது இந்த ஆண்டு தமிழ்நாட்டின் SDRF-க்கு மத்திய அரசு அளிக்க வேண்டியது. அதனைத்தான் மத்திய அரசு அளித்துள்ளது. NDRF-இல் இருந்து இதுவரை தமிழ்நாட்டுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படவில்லை.

சவாலான நிதிநிலைச் சூழல் இருக்கும் போதிலும், மத்திய அரசு இந்தக் கூடுதல் நிதி தராத போதிலும், மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு மாநில அரசு நிதியைச் செலவிட்டு நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருவதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நிவாரண உதவிக்கும் மீட்புப் பணிகளுக்கும் இதுவரை 1500 கோடி ரூபாய்க்குக் கூடுதலாக செலவிடப்பட்டுள்ளதாகவும், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் அறிவித்துள்ள நிவாரண உதவிகளுக்கும், பணிகளுக்கும் 500 கோடி ரூபாய்க்கு மேல் செலவாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதுமட்டுமின்றி, சேதமடைந்துள்ள சாலைகள், பாலங்கள், குடிநீர்த் திட்டங்கள், மருத்துவமனைகள், பல்வேறு கட்டடங்கள் போன்றவற்றை சீரமைப்பதற்கும் பெரும் நிதி தேவைப்படும் எனவும் முதல்வர் ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் தாமதமின்றி இந்த இரண்டு பேரிடர்களையும் கடும் பேரிடர்களாக அறிவித்து மத்திய அரசு NDRF-இல் இருந்து கோரப்படுள்ள நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் எனவும் முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆனால், தமிழக கனமழை, வெள்ளத்தை தேசிய பேரிடராக அறிவிக்க இயலாது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். “தமிழகத்தில் ஏற்பட்ட மழை, வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க இயலாது. தேசிய பேரிடராக அறிவிக்கும் நடைமுறை தற்போது இல்லை.  தேசிய பேரிடராக இதுவரை மத்திய அரசு அறிவித்ததே இல்லை. இனி அறிவிக்கவும் முடியாது.” என அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

click me!