
நாகப்பட்டினம்
நாகப்பட்டினத்தில் இரவு, பகல் பாராது சட்ட விரோதமாக மண் அள்ளுகிறார்கள் என்றும் புகார் அளித்தால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் சட்ட விரோதமாக மணல் அள்ளுபவர்களுக்கு உடந்தையாக இருக்கின்றனர் என்றும் மக்கள் பகிரங்கமாக குற்றம் சாட்டுகின்றனர்.
நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் ஒன்றியத்துக்கு உள்பட்ட காக்கழனி கிராமத்தில் நாளொன்றுக்கு சராசரியாக 200-க்கும் மேற்பட்ட லாரிகள் மற்றும் டிராக்டர்களில் பல்வேறு ஊர்களுக்கு சட்ட விரோதமாக மணல் ஏற்றிச் செல்லப்படுகின்றன.
இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காமல் சட்ட விரோதமாக மணல் அள்ளுபவர்களுக்கு துணைப் போவதாக மக்கள் பகிரங்க குற்றம் சாட்டுகின்றனர்.
இளைஞர்கள் மற்றும் மாணவ அமைப்பினர் மணல் ஏற்றிச் செல்லும் வாகனங்களை தடுத்தால், மணல் அள்ளும் சமூக விரோதிகள் அடியாள்களைக் கொண்டு மிரட்டுகின்றனர். அதுமட்டுமில்லாமல் தலைமை அதிகாரிகளுக்கு பணம் கொடுத்து சரி செய்து விடுகின்றனராம்.
அன்றாடம் விவசாயிகள், ஊர் மக்கள், பள்ளி மாணவர்கள், வாகன ஓட்டிகள் செல்லக்கூடிய கிராமச் சாலைகளில் மணல் லாரிகள் இடைவெளி இல்லாமல் தொடர்ந்து செல்வதால், போக்குவரத்து பாதிக்கப்படுவதோடு மட்டுமில்லாமல் எந்த நேரமும் விபத்து நடக்கக் கூடிய அச்சுறுத்தல் இருக்கிறது.
அண்மையில் காக்கழனியில் இருந்து மணல் ஏற்றிச் சென்ற லாரி மோதியதில் பக்கத்துக் கிராமமான செருநல்லூரைச் சேர்ந்த 11-ஆம் வகுப்பு பள்ளி மாணவி உயிரிழந்துள்ளார்.
இரவு பகலாக காக்கழனி கடுவையாறு மற்றும் குளங்களில் பெருமளவில் மணல் கொள்ளையடிக்கப்பட்டு வருவதால் நீர்வளம் பாதிக்கப்பட்டுள்ளது.
காக்கழனியில் 40 ஆண்டுகளுக்கு முன்பாக கட்டித்தரப்பட்ட சாலை ஓரத்தில் இருக்கக் கூடிய அரசு குடியிருப்பு காலனிகள் மணல் ஏற்றிச் செல்லும் வாகன அதிர்வால் மேற்கூரை பெயர்ந்து பாதிப்புக்குள்ளாகிறது.
அரசு அனுமதித்த குளங்களில் வண்டல் மண் எடுக்க மட்டும் அனுமதி உள்ள நிலையில் அரசு கிராம அதிகாரிகள் மணல் திருட்டை கண்டுகொள்வதில்லை. இந்த நிலை தொடர்ந்தால், மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்று கிராமத்தினர் பயப்படுகின்றனர்.