
வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்ச்சியால் வட மற்றும் தென் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.
தென் மேற்கு பருவமழை தமிழகத்தின் பல இடங்களில் பெய்து வருகிறது. சென்னையில் கடந்த சில நாட்களாக மாலை வேளையில் பலத்த மழை பெய்து வருகிறது. நிலப்பகுதியில் மேல் அடுக்கு சுழற்சி உள்ளதால் இன்றும், நாளையும் உள் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும் எனவும் கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் வானிலை ஆய்வு மைய இயக்குனர் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
அதன்படி தமிழகத்தின் பல்வேறு பகுதியில் மழை பரவலாக பெய்து வருகிறது. இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன், கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னை அண்ணா பல்கலை பகுதியில் 8 செ.மீ மழை பதிவாகியுள்ளதாக தெரிவித்தார்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தென் மேற்கு பருவமழை இயல்பை விட 33 சதவீதம் அதிகம் பெய்துள்ளதாகவும், தமிழகத்தில் ஜூன் 1 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 17 ஆம் தேதி வரை 21 செமீ மழை பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்தார்.
தமிழகத்தில் கடந்த 6 ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு மழை பதிவாகியுள்ளது எனவும், வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்ச்சியால் வட மற்றும் தென் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.