
இன்னும் நான்கு நாட்களில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வட தமிழகத்தை நோக்கி நகர்ந்து வரும் என்று கூறியுள்ளது சென்னை வானிலை மையம். இதனால், கன மழை பெய்யும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
அந்தமானுக்கு தெற்கே வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி ஒன்று உருவாகியுள்ளது.
அந்தமானுக்கு தெற்கே வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகி யுள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் பேசிய போது, தெரிவித்துள்ளார். புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, அடுத்த 2 நாட்களில் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும், அடுத்த 4 நாட்களில் வட தமிழகத்தை நோக்கி இந்தத் தாழ்வு மண்டலம் நகரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே நேற்று குமரியை புரட்டிப் போட்ட புயல், சற்று மெதுவாக நகர்ந்து அரபிக் கடலைக் கடக்கும் என்று கூறப்பட்டது. ஆனால், லட்சத்தீவுகளைக் கடக்க வேண்டிய புயல் திருவனந்தபுரத்தைச் சுற்றி மையம் கொண்டிருந்தது. இதனால் குமரி மாவட்டம், நெல்லை மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதி, தென் கேரளம் உள்ளிட்ட பகுதிகளில் கன மழை கொட்டித் தீர்த்தது. நெல்லை, குமரி மாவட்ட அணைகள் விரைவில் நிரம்பின. தாமிரபரணி நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பல இடங்களில் தரைப் பாலங்கள் மூழ்கியதால், மக்கள் ஆற்றைக் கடக்க பெரிதும் சிரமப் பட்டனர்.