
New scheme to prevent TASMAC from charging extra for liquor bottles : நாளுக்கு தாள் மாறி வரும் நவீன காலத்திற்கு ஏற்ப மக்களும் மாறி வருகிறார்கள். முன்பெல்லாம் ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருந்த மதுக்கடை ஒவ்வொரு ஊரிலும் முக்கிய இடங்களை பிடித்துள்ளது. ஆண்களுக்கு இணையாக பெண்களும் மதுவிற்கு அடிமையாகி வருகிறது. பல நட்சத்திர விடுதிகளில் நடைபெறும் இரவு கொண்டாட்டங்களில் பெண்களின் கைகளில் மதுபான கோப்பை காட்சி அளிக்கிறது. மேலும் மது குடிப்பவர்களை ஒதுக்கி வைத்த காலம் மலையேறிவிட்டது. தற்போது மது குடிக்காதவர்களை தான் நண்பர்களின் கூட்டத்தில் இருந்து ஒதுக்கி வைக்கப்படுகிற நிலை உருவாகியுள்ளது. சர்வ சாதரணமாக மாறிவிட்ட மதுப்பழக்கத்தால் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மது விற்பனையும் உச்சத்தை தொட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் 4700 டாஸ்மாக் கடைகள் உள்ள நிலையில் இதன் ஒரு நாள் வருவாய் 100 கோடியை அசால்டாக தாண்டி விடுகிறது.
இதுவே தீபாவளி, பொங்கல் புத்தாண்டு என்றால் கேட்கவா வேண்டும் 200 கோடியை தாண்டி விடுகிறது. டாஸ்மாக்கில் வருமானம் கொட்ட கொட்ட புதுப்புது திட்டங்களையும் தமிழக அரசு தொடங்கி வருகிறது. இந்த நிலையில் டாஸ்மாக் கடைகளை நவீனமயமாக்க பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்துள்ளது. அதன் படி கள்ளத்தனமாக மது விற்பனையை தடுக்க டிஜிட்டல் முறை அமல்செய்யப்பட்டது. ஏ.டி.எம். கார்டு, யு.பி.ஐ. பறிமாற்றம் மூலம் 2 சதவீதம் அளவுக்கு பணம் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 20 சதவீதத்தை தாண்டி டிஜிட்டல் பறிமாற்றம் நடக்கிறது. இதனை மீறியும் கள்ளத்தனமாகவும், அதிக விலைக்கு மதுபானம் விற்கவும் செய்யப்படுகிறது. அந்த வகையில் ஒரு நாளைக்கு சுமார் 70 லட்சம் பேர் டாஸ்மாக் கடைகளில் மது வாங்குவதாக கூறப்படுகிறது. மேலும், ஒரு கோடி பாட்டில்கள் தினசரி விற்பனையாகின்றன ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் கமிஷன் என கணக்கிட்டால், தினசரி 10 கோடி ரூபாய் கள்ளத்தனமாக வருமானம் கிடைப்பதாக தகவல் கூறப்படுகிறது.
இதனை கட்டுப்படுத்த பலவகையிலும் டாஸ்மாக் நிர்வாகத்தால் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. ஆனாலும் உத்தரவை மீறி கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை செய்யப்படுகிறது. கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் ஊழியர்கள் மீதும் சஸ்பெண்ட் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அடுத்தாக டிஜிட்டல் முறையில் பணம் வசூலிக்கும் முறை அமல் செய்யப்பட்டது. இந்த முறையில் பீர் பாட்டிலுக்கு உரிய விலையை விட ஆன்லைன் மூலம் பணம் வசூலிக்கும் போது பாட்டிலுக்கு கூடுதலாக 10 முதல் 20 ரூபாய் அதிகமாக வசூலிக்கப்பட்டு வருவதாகவும் புகார் வந்தது. இந்த நிலையில் தான் மதுபான பாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் வசூலிப்பதை தடுக்கும் வகையில் புதிய திட்டத்தை தமிழக அரசு ஆலோசித்துள்ளது. அந்த வகையில் கடைகளில் வாங்கிய பொருட்களுக்கு மட்டுமே பணம் கட்டுவது போல் ஸ்கேன் செய்யும் முறை உள்ளது அதே போல நடைமுறையைக கொண்டுவரப்படவுள்ளது.
பாட்டிலை ஸ்கேன் செய்யும் போது பாட்டில் விலை மட்டுமே ஸ்வைப் இயந்திரத்தில் வரும் இதனால் கூடுதலாக பணம் வசூலிக்க முடியாது. இது தொடர்பாக ஆலோசிப்பதற்காக வங்கி அதிகாரிகளோடு டாஸ்மாக் மேலான் இயக்குனர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆலோசனை நடத்தியுள்ளனர். இந்த ஆலோசனையின் படி டாஸ்மாக் கடைகளில் கூடுதல் கட்டணத்தை வசூலிப்பதை தடுக்க டிஜிட்டல் இயந்திரத்தில் மாற்றம் செய்து 10 நாட்களுக்குள் தருவதாக வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக டாஸ்மாக் கடைகளில் 10 ரூபாய் கூடுதலாக வசூலிப்பது தடுக்க வாய்ப்பு உருவாகியுள்ளது.