அறந்தாங்கி காவல் நிலையத்தை இரண்டாக பிரிக்கும் அவசியம் எழவில்லை என முதல்வர் ஸ்டாலின் சட்டமன்றத்தில் தெரிவித்தார். மேலும் ஆவுடையார் கோயிலில் புதிய தீயணைப்பு நிலைய கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
Steps to set up new police stations and fire stations in Tamil Nadu Chief Minister M.K. Stalin : தமிழக சட்டமன்றத்தில் இன்று கேள்வி நேரம் நடைபெற்றது. அப்போது சட்டமன்ற உறுப்பினர் ராமசந்திரன் தொகுதி தொடர்பாக கேள்வி எழுப்பினார். அறந்தாங்கி நகரில் மக்கள் தொகை பெருகி வருவதால் நகரின் எல்லைப் பகுதிகள் விரிவடைவதால் புதிய கூடுதல் காவல் நிலையம் அமைக்கப்படுமா என கேட்டார். இதற்கு பதில் அளித்த முதலமைச்சர் ஸ்டாலின், 1949ம் ஆண்டு முதல் அறந்தாங்கி காவல் நிலையம் இயங்கி வருகிறது. தற்போது ஒரு காவல் ஆய்வாளர் நான்கு உதவி ஆய்வாளர் 7 தலைமை காவலர்கள், 12 முதுநிலை காவலர்கள், 39 இரண்டாம் நிலை காவலர்கள் என 63 காவலர்கள் பணி புரிந்து வருகிறார்கள்.
புதிய காவல்நிலையம்
அறந்தாங்கி கோட்டத்தை பொருத்தவரை, அறந்தாங்கி காவல் நிலையம், நாகுடு காவல் நிலையம், ஆவுடையார் கோவில் காவல் நிலையம் கரூர் ஆகிய ஐந்து சட்ட ஒழுங்கு காவல் நிலையம், இயங்கி வருகிறது. அது மட்டும் இல்லமால் அறந்தாங்கி மகளிர் காவல் நிலையம் மற்றும் போக்குவரத்து காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. மேலும், கடந்த சில ஆண்டுகளில் பதிவான வழக்குகளின் எண்ணிக்கையை வைத்து பார்த்தல், அறந்தாங்கி காவல் நிலையத்தை இரண்டாக பிரித்து புதிய காவல் நிலையம் கட்டுவதற்கான அவசியம் எழவில்லை என, பதில் அளித்தார்.
தீயணைப்பு நிலையம் கட்ட நிதி ஒதுக்கீடு
இதனை தொடர்ந்து மீண்டும் சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் அறந்தாங்கி தொகுதி ஆவுடையார் கோயிலில் இயங்கி வரும் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்படுமா? என கேட்டார். இதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதில் அளிக்கையில், புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தீயணைப்பு மீட்பு பணிகள் துறைக்கு 1.8.2019 இடமாற்றம் செய்யப்பட்டு, இந்த நிலையத்திற்கு சொந்தமாக புதிய கட்டடம் கட்டுவதற்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் ஆணைப்படி 2 கோடியே 59 லட்சத்து 83 ஆயிரம் நிதி ஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. புதிய கட்டடம் கட்டும் பணி மே மாதம் தொடங்கப்பட்டு, பிப்ரவரி 2026ம் ஆண்டிற்குள் கட்டி முடிக்கப்படும் என கூறினார்.
சூலூர் தீயணைப்பு நிலையம்
அடுத்ததாக சட்டமன்ற உறுப்பினர் கந்தசாமி சூலூரில் வாடகை கட்டிடத்தில் இயங்கிவரும் தீயணைப்பு நிலையத்திற்கு புதிய கட்டிடம் கட்டித்தர அரசு முன் வருமா? என கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த முதலமைச்சர், சூலூர் தீயணைப்பு நிலையத்திற்கு நிரந்திர கட்டடம் கட்ட இடம் கண்டறியப்பட்டுள்ளது. எனவே தீயணைப்பு துறைக்கு மாற்றம் செய்யப்பட உடன் இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறினார். அடுத்ததாக சட்டமன்ற உறுப்பினர் கணபதி அய்யப்பாக்கத்தில் புதிய தீயணைப்பு நிலையம் அமைக்கப்படுமா? என கேள்வி எழுப்பினார்.
புதிய காவல்நிலையம் அமைக்க நடவடிக்கை
இதற்கு முதலமைச்சர் ஸ்டாலின், 25 கி.மீ தொலைவுக்குள் நான்கு தீயணைப்பு நிலையங்கள் உள்ளன. அய்யப்பாக்கத்தில் தற்போது புதிய தீயணைப்பு நிலையம் அமைக்கும் நிலை எழவில்லை தொடர்ந்து பேசிய முதலமைச்சர், பேரவையில் உள்ள பல உறுப்பினர்கள் காவல்நிலையம் மற்றும் தீயணைப்பு நிலையங்கள் வேண்டி கோரிக்கை வைக்கின்றனர். 2021ல் இருந்து, 72 புதிய காவல்நிலையங்கள், 23 தீயணைப்பு நிலையங்கள் தொடங்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளன.
மாநிலத்தின் நிதிநிலைக்கு ஏற்ப சாத்தியக்கூறுகள் இருக்கும் இடத்தில் புதிய காவல்நிலையங்கள் தொடங் நடவடிக்கை எடுக்கப்படும். காவல் துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் தாக்கல் செய்யும் நேரத்தில் நிச்சயமாக நீங்கள் திருப்தி அடையக்கூடிய வகையிலே சில அறிவிப்புகளும் வரும் என தெரிவித்தார்.