ஹேப்பி நியூஸ்.. சென்னையில் புதிதாக 23 பூங்காக்கள்.. ரூ.18 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை..

By Thanalakshmi VFirst Published Jan 22, 2022, 3:23 PM IST
Highlights

சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.18 கோடி மதிப்பில் புதிதாக 23 பூங்காக்கள் அமைக்கப்படவுள்ளதாகவும் 28 பூங்கா திட்டப் பணிகளுக்கான ஒப்பந்தங்கள் கோரப்பட்டுள்ளதாகவும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
 

திமுக ஆட்சி பொறுப்பேற்று நடைபெற்ற முதல் கூட்டத்தொடரின் ஆளுநர் உரையிலேயே சிங்காரச் சென்னை திட்டம் அறிவிக்கப்பட்டது. நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டபோது 2021-22 ஆம் ஆண்டுக்கான பணிகளுக்காக 500 கோடி ஒதுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இதற்கான அரசாணையும் உடனடியாக தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அரசாணையில், சிங்காரச் சென்னை 2.0 திட்டப் பணிகளுக்கு ஒப்புதல் வழங்கவும், பணிகளை கண்காணிக்கவும், தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, அரசு கூடுதல் தலைமைச் செயலாளரின் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ் பசுமை சென்னை, கலாச்சாரம் மிகு சென்னை, தூய்மை சென்னை, நீர்மிகு சென்னை, எழில்மிகு சென்னை, நலம்மிகு சென்னை, கல்விமிகு சென்னை உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளின் கீழ் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் வகையில் ராட்சத ராட்டினங்களை உள்ளடக்கிய பூங்காக்களை உருவாக்குதல், கடற்கரை சாலைகளை அழகுபடுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மூலம் சுற்றுலாவை ஊக்குவிக்க பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது. இவைகள் மட்டுமல்லாது போக்குவரத்து பயன்பாடு, மக்களின் பயணங்களை எளிதாக்குதல், மக்கள் மாநகராட்சியை எளிதாக அணுகுதல், E-governance என பல்வேறு வகையாக பணிகளை உள்ளடக்கி சென்னை 2.0 திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இந்நிலையில் பெருநகர சென்னை மாநகராட்சி பூங்காத்துறையின் சார்பில் 718 பூங்காக்கள் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இவற்றில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள 547 பூங்காக்கள் ஒப்பந்த அடிப்படையில் தனியார் வசமும், 111 பூங்காக்கள் தத்தெடுப்பு முறையில் தனியார் வசமும், ஒப்படைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பூங்காக்கள் மாநகராட்சியால் பராமரிக்கப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில். பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் புதிய பூங்காக்கள் அமைத்தல் மற்றும் பூங்காக்களை மேம்படுத்த சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தில் 28 பணிகளுக்கு அரசின் நிர்வாக அனுமதி பெறப்பட்டு ரூ. 24.43 கோடி ஒதுக்கீடு செய்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதில், 23 பூங்காக்கள் ரூ 18.48 கோடி மதிப்பில் புதியதாக அமைக்கப்பட உள்ளன.

5 பூங்காக்கள் ரூ 5.95 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட உள்ளன. 28 பூங்கா திட்டப் பணிகளுக்கான ஒப்பந்தங்கள் கோரப்பட்டுள்ளன. ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்ட பிறகு பணியாணை வழங்கப்பட்டு பணிகள் விரைவில் தொடங்கப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. மேலும், இந்த பூங்காக்களில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நடைபாதை, குழந்தைகள் விளையாட்டு பகுதி, திறந்த வெளியில் உடற்பயிற்சி கருவிகள், சுற்றுச்சுவர்களில் வண்ணமயமான ஓவியங்கள், புல் தரைகள், பாரம்பரிய மர வகைகள், பொதுமக்களுக்கான கழிவறை மற்றும் குடிநீர் வசதி, மின்விளக்குகள் உட்பட பல்வேறு திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

click me!