
இராமநாதபுரம்
இராமநாதபுரத்தில் இளைஞர்கள் பயன்பெறும் வகையில் புதிய அரசு மருத்துவ மற்றும் விவசாய கல்லூரி அமைப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் தெரிவித்தார்.
இராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பாக ஒருங்கிணைந்த ஊரக பள்ளிக் கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.22.16 இலட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி வகுப்பறை கட்டிட திறப்பு விழா நடைப்பெற்றது.
இந்த விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் நடராஜன் தலைமை வகித்தார். விழாவில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் பங்கேற்று பள்ளிக் கட்டிடத்தை திறந்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து அவர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழ்நாடு அரசு 100 நாள்களில் இராமநாதபுரம் மாவட்ட அளவில் செயல்படுத்தியுள்ள திட்டங்கள், சாதனைகள் குறித்த சாதனை விளக்க கையேட்டினை வெளியிட்டார்.
இந்த விழாவில் அமைச்சர் மணிகண்டன் பேசியது:
“மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா காட்டிய வழியில் செயல்படுகின்ற தமிழ்நாடு அரசு பள்ளிச் செல்லும் மாணவ, மாணவிகளின் நலனுக்காக எண்ணற்ற நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
விரைவில் அனைத்துத் திட்டங்களுக்கும் செயல்வடிவம் கொடுக்கப்பட்டு பள்ளி கல்வித் துறையில் வியக்கத்தக்க வளர்ச்சி ஏற்படுத்தப்படும்.
நடப்பு கல்வியாண்டில் 5 இலட்சம் மாணவ, மாணவிகளுக்கு ரூ.890 கோடி மதிப்பில் விலையில்லா மடிக்கணினிகள் வழங்க திட்டமிடப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள இளைஞர்கள் பயன்பெறும் வகையில் அரசு சட்டக் கல்லூரி அமைக்க உத்தரவிடப்பட்டு நடப்பு கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
இதுதவிர, முதலமைச்சரிடம் இராமநாதபுரம் மாவட்ட இளைஞர்கள் பயன்பெறும் வகையில் புதிய அரசு மருத்துவ கல்லூரி மற்றும் அரசு விவசாய கல்லூரி அமைப்பதற்கு வலியுறுத்தி அதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என்று அவர் பேசினார்.
இந்த விழாவில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தனபதி, ஊராட்சிகளின் உதவி இயக்குனர் செல்லத்துரை, மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ஜெயஜோதி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அண்ணாதுரை, திருப்புல்லாணி வட்டார வளர்ச்சி அலுவலர்ரோஜா உள்பட பலர் பங்கேற்றனர்.