வேகமாக பொங்கி வரும் நீர்.! முல்லை பெரியாறு பாதுகாப்பாக உள்ளதா.? களத்தில் இறங்கிய ஆய்வு குழு

Published : Jun 03, 2025, 10:46 AM ISTUpdated : Jun 03, 2025, 10:54 AM IST
mullai periyar dam

சுருக்கம்

முல்லைப் பெரியாறு அணையில் மத்திய கண்காணிப்பு குழுவின் புதிய துணை கண்காணிப்பு குழுவினர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அணையின் பல பகுதிகளை ஆய்வு செய்து, மராமத்து பணிகள் குறித்து ஆலோசிக்க உள்ளனர். 

தென்மேற்கு பருவமழை தீவிரம்- முல்லை பெரியாறு அணையில் ஆய்வு :  தேனி, மதுரை,திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட ஐந்து மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் விவசாய நீர்ப்பாசன ஆதாரமாகவும் முல்லைப் பெரியாறு அணை அமைந்துள்ளது. முல்லைப் பெரியாறு அணையில் நடந்து வரும் பராமரிப்பு பணிகளை கண்காணிப்பதற்காக உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கின் அடிப்படையில் முல்லைப் பெரியாறு அணையை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் என மத்திய நீர் வளத்துறை கமிஷன் பரிந்துரை செய்தது. 

முல்லை பெரியாறு அணை பாதுகாப்பு

புதிதாக தேசிய அணைகள் பாதுகாப்பு குழு ஆணைய தலைவராக அணில் ஜெயின் தலைமையில் ஏழு பேர் கொண்ட கண்காணிப்பு குழுவினரை நியமித்துள்ளனர். இந்த குழுவில் தமிழக அரசு சார்பில் நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலர் மங்கத் ராம் சர்மா, காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் சுப்பிரமணியன்,கேரள அரசு சார்பில் கூடுதல் தலைமைச் செயலர் டிங்கு பிஷ்வால்,கேரள நீர்வளத்துறை தலைமை பொறியாளர் பிரியேஸ் மற்றும் இரண்டு தொழில்நுட்ப வல்லுநர்கள் என ஏழு பேர் கொண்ட குழுவினர் உள்ளனர். மேலும் கண்காணிப்பு குழுவினருக்கு உதவியாக ஐந்து பேர் கொண்ட துணை கண்காணிப்பு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. 

கண்காணிப்பு குழுவினர் கடந்த மாதம் அணையில் ஆய்வு செய்த நிலையில், துணை கண்காணிப்பு குழுவினர் முதல் முறையாக இன்று அணையில் ஆய்வு செய்து வருகின்றனர். முல்லை பெரியாறு அணை பலவீனமாக இருந்து வருவதாக தொடர்ந்து கேரள அரசு கூறி வருகிறது. இந்த நிலையில்  தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து வருவதால் முல்லை பெரியாறு அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1373 கன அடியாக உள்ளது. அணையின் நீர்மட்டம் 130.45 அடியாக உள்ளது. எனவே முழு கொள்ளளவை விரைவில் எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மத்திய துணை கண்காணிப்பு துணை குழு ஆய்வு

 இந்நிலையில் அணையில் செய்ய வேண்டிய மராமத்து பணிகள் குறித்து மத்திய கண்காணிப்பு குழுவின் சார்பாக அமைக்கப்பட்ட புதிய துணை கண்காணிப்பு குழுவினர் கண்காணிப்பு குழு இயக்குனர் கிரிதர் தலைமையில், தமிழக அரசு சார்பில் தலைமை பொறியாளர் சாம் இர்வின், பெரியாறு அணை செயற்பொறியாளர் செல்வம் ஆகியோரும் கேரள அரசு சார்பில் தலைமை பொறியாளர் லியன்ஸ் பாபு உதவி பொறியாளர் ஜிசித் ஆகியோர் அடங்கிய ஐந்து பேர் கொண்ட குழுவினர் மற்றும் இரு மாநில அதிகாரிகள் ஆய்வுப் பணிகளை மேற்கொள்வதற்காக படகின் மூலம் அணை பகுதிக்கு சென்றுள்ளனர்.

இந்த ஆய்வில் மெயின் அணை, பேபி அணை, ஷட்டர் பகுதிகள், அணையில் நீர் கசிவு, மற்றும் கேலரி பகுதிகளை ஆய்வு செய்ய உள்ளனர். அதனை தொடர்ந்து மாலை குமுளியில் உள்ள பெரியாறு அணை கண்காணிப்புக்கு குழு அலுவலகத்தில் இரு மாநில அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டத்தை நடத்த உள்ளனர்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

வழக்கறிஞர் சொல்லி எஸ்.ஐ. மடக்கி கதறவிட்ட அலமேலு.. விசாரணையில் வெளியான அதிர்ச்சி
திமுக ஆட்சியில் தலைதூக்கிய துப்பாக்கி கலாசாரம்.. போட்டுத் தாக்கிய அதிமுக!