இன்று உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுபகுதி.. ஒரு நாள் ரெஸ்ட்டுக்கு பிறகு மீண்டும் மழை.. எங்கெங்கு கொட்டும்?

By Asianet TamilFirst Published Nov 13, 2021, 8:01 AM IST
Highlights

இன்று சென்னையைப் பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டமாக இருக்கும். சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ளதால்,  தமிழகத்தில் இன்று 19 மாவட்டங்களில் பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

வங்கக் கடலில் கடந்த 9-ந்தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. அது தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, சென்னை அருகே நேற்று முன்தினம் கரையைல் கடந்தது. இதனால், வட தமிழகம் உள்படல பல இடங்களில் கன மழை பெய்தது. அதன் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள் இன்னும் ஓயாத நிலையில், அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று உருவாகலாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அது அங்கிருந்து நகர்ந்து திங்கள்கிழமை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதனால், தமிழகத்தின் பல பகுதிகளில் இன்று முதல் வரும் செவ்வாய் வரை  மிதமான மழை முதல் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், பெரம்பலூர், திருச்சி, மதுரை, விருதுநகர், தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 19 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிற மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை இன்று பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஞாயிற்றுக்கிழமை அன்று திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஈரோடு, நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும். புதுச்சேரி, கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மிதமான மழையும், தென் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யலாம். காற்றழுத்த தாழ்வு பகுதியானது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற்ய பிறகு திங்கள் அன்று வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், சேலம், தர்மபுரி, நீலகிரி, ஈரோடு, தேனி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், தமிழகத்தின் வட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில்  மிதமான மழையும், தென் மாவட்டங்களில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

சென்னையில் ஏற்கெனவே பெய்த பெரும் மழை, வெள்ளத்திலிருந்து இப்போதுதான் நகரம் மெல்லமாக மீண்டு வருகிறது. இன்று சென்னையைப் பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டமாக இருக்கும். சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே மழை, வெள்ளப் பாதிப்புகள் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இன்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன.

click me!