பள்ளிக்கல்வித்துறை ஊழியர்களுக்கு குட் நியூஸ்… 15% ஊதிய உயர்வு அறிவிப்பு!!

By Narendran SFirst Published Nov 12, 2021, 4:01 PM IST
Highlights

தமிழக கல்வித்துறை ஊழியர்களுக்கு நவம்பர் 1 ஆம் தேதி முதல் 15% ஊதிய உயர்வு வழங்கப்படும் என்பதால் பள்ளிக்கல்வித்துறை ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

தமிழக கல்வித்துறை ஊழியர்களுக்கு நவம்பர் 1 ஆம் தேதி முதல் 15% ஊதிய உயர்வு வழங்கப்படும் என சமக்ர சிக்‌ஷா மாநில திட்ட இயக்குநர் தெரிவித்துள்ளார். இதனால் பள்ளிக்கல்வித்துறை ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கல்வித் துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 15 சதவிகித ஊதிய உயர்வு வழங்க உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக பள்ளி,  கல்லூரிகள் திறக்கப்படாமல் இருந்தது.  தற்போது கொரோனா குறைந்து வரும் நிலையில் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும்,  கடந்த நவம்பர் 1 ஆம் தேதி முதல் 1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அத்துடன் மாணவர்களின் கற்றல் இடைவெளி மற்றும் இழப்புகளை சரி செய்ய இல்லம் தேடிக் கல்வித் திட்டம் கொண்டுவரப்பட்டு, லட்சக்கணக்கான தன்னார்வலர்களுக்கு பணி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் சமக்ர சிக்‌ஷா அபியானில் பணியாற்றும் நிரலர், கட்டிட பொறியாளர்கள், கணக்காளர்கள், மாத பணி நிறைவு அறிக்கை தயார் செய்வோர், தரவு உள்ளீடு செய்வோர், ஓட்டுநர்கள், அலுவலக உதவியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், உதவியாளர்கள் அனைவருக்கும் 15% ஊதிய உயர்வு வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.  

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது திமுகவினர் பல்வேறு வாக்குறுதிகளை அளித்தனர். அதில் அரசு ஊழியர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படும் போன்றவை அறிவிக்கப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு அடுத்த ஆண்டு ஜனவரி முதல் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதனை தொடர்ந்து கடந்த 4 ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு போனஸ் தொகை வழங்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக தற்போது கல்வித்துறை ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. சமக்ர சிக்‌ஷாவில் பணியாற்றும் நிரலர், கட்டட பொறியாளர்கள், கணக்காளர்கள், மாத பணி நிறைவு அறிக்கை தயார் செய்வோர், தரவுகளை பதிவு செய்வோர், ஓட்டுநர்கள், அலுவலக உதவியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், உதவியாளர்கள் என்று அனைவருக்கும் 15% ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று சமக்ர சிக்‌ஷா மாநில திட்ட இயக்குநர் தெரிவித்துள்ளார். இந்த 15 சதவீத ஊதிய உயர்வானது நவம்பர் 1 ஆம் தேதி முதல் கணக்கிட்டு வழங்கப்படும் என்றும் மேலும் அரசு ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்று தற்போது ஆலோசகராக பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக கல்வித்துறை ஊழியர்களுக்கு நவம்பர் 1 ஆம் தேதி முதல் 15% ஊதிய உயர்வு வழங்கப்படும் என்பதால் பள்ளிக்கல்வித்துறை ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

click me!