சாஃப்டர் பள்ளி விபத்துக்கு இதுதான் காரணம்… தகுதி சான்றிதழ் வழங்கியதில் அலட்சியம்!!

Published : Dec 20, 2021, 11:28 AM IST
சாஃப்டர் பள்ளி விபத்துக்கு இதுதான் காரணம்… தகுதி சான்றிதழ் வழங்கியதில் அலட்சியம்!!

சுருக்கம்

சுவர் இடிந்து மாணவர்கள் உயிரிழக்க காரணமான சாஃப்டர் பள்ளிக்கு, 3 மாதங்களுக்கு முன்பு தான் சரியாக உள்ளது என்ற தகுதிச் சான்றிதழை நெல்லை மாநகராட்சி வழங்கியுள்ளது தெரியவந்துள்ளது. 

சுவர் இடிந்து மாணவர்கள் உயிரிழக்க காரணமான சாஃப்டர் பள்ளிக்கு, 3 மாதங்களுக்கு முன்பு தான் சரியாக உள்ளது என்ற தகுதிச் சான்றிதழை நெல்லை மாநகராட்சி வழங்கியுள்ளது தெரியவந்துள்ளது. நெல்லை டவுன் எஸ்.என்.ஹைரோடு பொருட்காட்சி மைதானம் எதிரே சாஃப்டர் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. நூற்றாண்டு பழமை வாய்ந்த இந்தப் பள்ளியில் 2,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். கொரோனா தொற்று குறைந்ததை அடுத்து தற்போது மாணவர்கள் நேரடியாக சென்று கல்வி கற்று வருகின்றனர். இந்நிலையில் இன்று வழக்கம்போல மாணவர்கள் பள்ளிக்கு சென்றபோது காலை 11 மணியளவில் இடைவேளை நேரம் வந்தது. அப்போது மாணவர்கள் கழிவறைக்கு செல்லத் தொடங்கினர். திடீரென கழிவறையின் தடுப்புச் சுவர் இடிந்து அங்கு நின்ற மாணவர்கள் மீது விழுந்ததாக கூறப்படுகிறது. இதைப்பார்த்த சக மாணவர்கள் அலறியடித்துக் கொண்டு அங்கிருந்து ஓடினர். சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் சிக்கி 2 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மற்றொரு மாணவர் மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். 4 மாணவர்கள் காயத்துடன் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவத்தை அடுத்து உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், உயிரிழந்த மூன்று மாணவர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ.10 லட்சமும், காயமடைந்த நான்கு மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சமும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து உடனடியாக வழங்கிட உத்தரவிட்டார்.  இதனை தொடர்ந்து பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டு, மாணவர்கள் அனைவரும் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சம்பவ இடத்தில் காவல்துறை அதிகாரிகள், பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தினர். இந்த விபத்து தொடர்பாக நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிக்கை தர பள்ளி கல்வித்துறை ஆணையம் உத்தரவிடப்பட்டுள்ளது.  அரசு நியமித்த குழுக்கள் தற்போது ஆய்வினை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே பள்ளிக்கட்டடங்களின் உறுதித்தன்மை குறித்து பள்ளி நிர்வாகம் கடந்த 2019-21க்குள் வருவாய்த்துறை, தீயணைப்புதுறை, மாநகராட்சியிடம் இருந்து முறையான சான்றிதழ் பெற்றுள்ளனர். ஆனால் அதிகாரிகள் முறையாக விசாரிக்காமல் சான்றிதழ் தந்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது. மாநகராட்சியின் சுகாதாரத்துறையினர் தரும் சுகாதார சான்றிதழை, மாநகர் நல அலுவலர்தான் ஆய்வு செய்து தரவேண்டும். அப்போது பணியாற்றிய மாநகர் நல் அலுவலர் சரோஜா. ஆனால் அவருக்கு பதிலாக கீழ்மட்ட அதிகாரிகளே ஆய்வு ஆய்வுக்கு சென்று கல்லாகட்டியுள்ளனர். ஆனால் தற்போது சரோஜா இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தற்போதைய ஆய்வுகளை மாநகர் நல அலுவலர் ராஜேந்திரன் மேற்கொள்கிறார். எனவே சரோஜா இருந்தபோது ஏன் கீழுள்ள அதிகாரிகள் ஆய்வுக்கு அனுமதிக்கப்பட்டனர் என்ற கேள்வி எழுந்துள்ளது. வருவாய்த்துறை சார்பில் ஆய்வு செய்த தாசில்தார், பள்ளியில் 650 மாணவர்கள் மட்டுமே படிக்கலாம் என சான்று அளித்துள்ளார். ஆனால் சாப்டர் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்வழி பிரிவுகளில் ஆயிரத்து 484 பேர், ஆங்கிலவழியில் ஆயிரத்து 236 பேர் என மொத்தம் 2 ஆயிரத்து 720 பேர் பயில்வதாக பள்ளியின் புள்ளிவிபரம் தெரிவிக்கிறது. இதுகுறித்து தற்போதைய திருநெல்வேலி தாசில்தாரிடம் கேட்டபோது, விசாரித்து சொல்வதாக தெரிவித்தார். தீயணைப்பு அதிகாரியும் ஆய்வின் தன்மை குறித்து விரிவான புள்ளி விபரங்களை பதிவு செய்யாமல் சான்றிதழ் அளித்துள்ளது தெரிய வந்துள்ளது. அரசு நிதியுதவி பெறும் தனியார் பள்ளிகளில் அரசு அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்து, குறைபாடுகள், செய்யப்பட்ட மாற்றங்கள் என எதையும் குறிப்பிடாமல் சான்றளித்தது தெரியவந்துள்ளது. இத்தகைய மேம்போக்கான நிலையே விபத்துகளுக்கு காரணமாக அமைந்துள்ளது என கூறப்படுகிறது.

PREV
click me!

Recommended Stories

தமிழகத்தில் வாக்குச் சாவடிகள் எண்ணிக்கை 75,035 ஆக உயர்வு! தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
வாக்கு வங்கிக்காக நீதிபதிக்கு எதிராக தீர்மானமா.. எதிர்க்கட்சிகள் மீது அமித் ஷா கடும் தாக்கு!