
புதுக்கோட்டை
மானிய விலையில் கருவிகள், இயந்திரங்கள் பெற விருப்பமுள்ள விவசாயிகள் உடனே வேளாண்மை பொறியியல் துறையில் பதிவு செய்ய வேண்டும் என்று புதுக்கோட்டை ஆட்சியர் கணேஷ் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை ஆட்சியர் கணேஷ் நேற்று செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டார்.
அதில், “தமிழக அரசின் 2017-18-ஆம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையில் வேளாண் இயந்திர மயமாக்கலுக்காக ரூ.100 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் ரூ.30 கோடி தனிப்பட்ட விவசாயிகள் மானிய விலையில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாங்கிடவும், வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாடகைக்கு வழங்குவதற்கு 590 மையங்கள் அமைத்திடவும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டம் வேளாண்மைப் பொறியியல் துறையால் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தில் 8 குதிரை திறன் முதல் 70 குதிரைத் திறன் வரை சக்தி கொண்ட டிராக்டர்கள், பவர் டில்லர், நெல் நடவு இயந்திரம், வைக்கோல் கட்டும் கருவி, சுழல் கலப்பை, விசை களையெடுப்பான், விதைக்கும் கருவி, வரப்பு அமைக்கும் கருவி, தட்டு வெட்டும் கருவி, டிராக்டரில் இயங்கும் தெளிப்பான் முதலான வேளாண் எந்திரங்களும், கருவிகளும் வாங்கி கொள்ள விவசாயிகளுக்கு மானிய உதவி வழங்கப்படுகிறது.
இந்தத் திட்டத்தில் சிறு, குறு ஆதி திராவிட, பழங்குடியின மற்றும் பெண் விவசாயிகளுக்கு 50 சதவீதம் வரையும், இதர விவசாயிகளுக்கு 40 சதவீதம் வரையுமான தொகை அல்லது அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட அதிகபட்ச மானிய தொகை இவற்றில் எது குறைவோ அந்த தொகை மானியமாக வழங்கப்படுகிறது.
மானியத்திற்கு தகுதியாக்கப்பட்ட வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் விவரம், அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்வேறு நிறுவனங்களின் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் விலை பட்டியல்கள், மானிய விவரங்கள் ஆகியவை புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வேளாண்மை பொறியியல் துறையின் உதவி செயற்பொறியாளர் அலுவலகங்களில் பார்வைக்கு வைக்கப்பட்டு உள்ளது.
மானிய உதவியுடன் கருவிகளை வாங்க விரும்பும் விவசாயிகள் வேளாண்மை பொறியியல் துறையில் உரிய நில உரிமை ஆவணங்கள், சிறு அல்லது குறு விவசாயி சான்று, ஆதார் போன்ற அடையாள ஆவணங்களுடன் விண்ணப்பித்து, மூதுரிமை பதிவேட்டில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
இதைப்போல வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாடகைக்கு வழங்கும் மையங்கள் அமைக்க விரும்பும் குழுக்களோ அல்லது தொழில் முனைவோரோ, ரூ.25 இலட்சம் மதிப்புடைய வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை வாங்கி வாடகை மையங்கள் அமைக்க முன்வந்தால் அவர்களுக்கு 40 சதவீதம் மானிய அடிப்படையில் அதிகபட்சமாக ரூ.10 இலட்சம் வரை மானியம் வழங்கப்படும்.
பண்ணை இயந்திரங்கள் மற்றும் கருவிகள் உபயோகம் குறைவாக உள்ள கிராமங்களில், கிராம அளவிலான குழுக்கள் ரூ.10 லட்சத்திற்கு குறையாத மதிப்புடைய பண்ணை எந்திரங்களை வாங்கி, வாடகை மையங்கள் நடத்தலாம். இதனை விவசாயக் குழுக்கள், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் போன்றவை மேற்கொள்ளலாம்.
மேற்குறிப்பிட்ட திட்டங்களில் பயனடைய விரும்பும் விவசாயிகள், விவசாய குழுக்கள், தொழல் முனைவோர், வேளாண்மை பொறியியல் துறை மாவட்ட செயற்பொறியாளர் அல்லது சம்பந்தப்பட்ட உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் இருந்து விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.
விண்ணப்பத்துடன் பாஸ்போர்ட் அளவு 2 புகைப்படம், ஆதார் அட்டை நகல், சிட்டா அடங்கல் நகல், சிறு குறு விவசாயிகளுக்கான சான்று, ஜாதிச் சான்று நகல், டிராக்டரில் இணைத்து இயக்க கூடிய கருவியாக இருந்தால் டிராக்டரின் பதிவு சான்று நகல், வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல் போன்றவற்றினை இணைத்து வழங்க வேண்டும்.
விண்ணப்பங்கள் மூதுரிமை பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டு, முன்னுரிமை அடிப்படையில் கருவிகள் வாங்க அனுமதி வழங்கப்பட்டு பின்னர் மானியம் வழங்கப்படும். விவசாயிகள் தாங்கள் விரும்பும் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளுக்கான முழுத் தொகையையும் வங்கி கேட்பு வரைவோலை மூலமாக உரிய உற்பத்தி நிறுவனங்களுக்கு வழங்க வேண்டும்.
வேளாண் இயந்திரங்கள், கருவிகளை விவசாயிகள் பெற்ற பின்னர் அதனை வேளாண்மை பொறியியல் துறை அலுவலர்கள் பார்வையிட்டு உறுதி செய்த பின்னர் அதற்குரிய மானிய தொகையை சம்பந்தப்பட்ட பயனாளி விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.
எனவே, மானிய விலையில் கருவிகள் மற்றும் இயந்திரங்கள் பெற விரும்பும் விவசாயிகள் உடனடியாக வேளாண்மை பொறியியல் துறையில் பதிவு செய்து கொள்ள வேண்டும்” என்று அதில் குறிப்பிட்டு இருந்தார்.