
பெரம்பலூர்
பெரம்பலூரில் நிலப்பட்டா, வீட்டுமனைப்பட்டா வழங்குவதில் வருவாய்த் துறையினர் மெத்தனமாக செயல்படுகின்றனர்” என்று குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் ஆட்சியரிடத்தில் குற்றம் சாட்டினார்.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பிரதான கூட்டரங்கில் நேற்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைப்பெற்றது.
இதற்கு மாவட்ட ஆட்சியர் சாந்தா தலைமை வகித்தார். அவர், விவசாயச் சங்கப் பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகளிடம் குறைகளை கேட்டு அறிந்தார்.
இதில், தமிழக விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளர் ராஜாசிதம்பரம் பங்கேற்றார். அப்போது அவர், “பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டு திட்டத்தின்கீழ் பயிர் காப்பீட்டுத் தொகையை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆலத்தூர் பகுதியில் விவசாயிகளுக்கு நிலப்பட்டா வழங்குவது, வீட்டுமனைப்பட்டா வழங்குவது தொடர்பான நடவடிக்கையில் வருவாய்த்துறையினர் மெத்தனமாக செயல்படுகின்றனர்” என்று குற்றம் சாட்டினார்.
அப்போது அங்கிருந்த மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் பாஸ்கரன், நிலப் பதிவேடு பற்றிய நடவடிக்கைகள் ஒருதலைபட்சமாக நடைபெறவில்லை. தற்போது ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது காவலாளர்கள் வழக்குப்பதிவு செய்யலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. அப்படி இருக்கையில் நீங்கள் கூறும் குற்றச்சாட்டு ஏற்புடையதல்ல என கூறி மறுத்தார்.
பின்னர், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் ரமேஷ், “தற்போது பெய்து வரும் பரவலான மழையால் பெரம்பலூர், குன்னம் பகுதிகளில் பயிரிடப்பட்ட மக்காச்சோள செடிகள் மஞ்சள் நிறத்தில் இருக்கிறது. இதனை அதிகாரிகள் பார்வையிட்டு பயிர் நன்றாக வளர உரிய ஆலோசனை வழங்க வேண்டும்.
பெரம்பலூர் மாவட்டத்தில் நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்.
அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் சி.சி.டி.வி. கேமரா பொருத்த வேண்டும். இதன் மூலம் அரசுஊழியர்கள், மக்கள் இடையே ஏற்படும் பிரச்சனைக்கு யார் காரணம் என்பதை அறிய முடியும். விவசாயிகள் மீது பொய் வழக்கு போடுவதையும் தடுக்கலாம்” என்று பேசினார்.
தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநிலத் துணைச் செயலாளர் ஏ.கே.ராஜேந்திரன் பேசுகையில், தமிழகம் முழுவதும் கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலை நிர்வாகத்தினர் கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்க வேண்டும்.
பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் இணைமின் திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும். ஏரி, குளங்களை ஆக்கிரமித்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டும்” என்று தெரிவித்தார்.
கூட்டத்தின் இறுதியில் கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் சாந்தா பதிலளித்த.
இதில், எறையூர் சர்க்கரை ஆலை தலைமை நிர்வாகி மாரிமுத்து, பெரம்பலூர் வேளாண்மை இணை இயக்குனர் சுதர்சன் உள்பட அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.