காய்கறிகளுக்குள் பதுக்கி ஒன்றரை டன் போதை பொருட்கள் கடத்தல்; கேரளாவைச் சேர்ந்த மூவர் கைது…

First Published Sep 23, 2017, 8:35 AM IST
Highlights
Trafficking into one and half tons of narcotics into the vegetables Three arrested in Kerala


நீலகிரி

கூடலூரில் மினி லாரியில் காய்கறிகளுக்குள் பதுக்கிவைத்து ஒன்றை டன் தடைச் செய்யப்பட்ட போதைப் பொருட்களை கடத்திய கேரளாவை சேர்ந்த மூவரை காவலாளர்கள் கைது செய்தனர்.

நீலகிரி மாவட்டம், கூடலூர் – மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள செவிடிப்பேட்டை சக்தி முனிசுவரன் கோவில் அருகே நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு காவல் ஆய்வாளர் சக்திவேல் தலைமையிலான காவலாளர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது மைசூருவில் இருந்து கூடலூர் வழியாக கேரளாவிற்கு காய்கறி மூட்டைகள் ஏற்றிக் கொண்டு மினி லாரி ஒன்று வந்துக் கொண்டிருந்தது. அதனைப் பார்த்து சந்தேகமடைந்த காவலாளர்கள் அந்த மினி லாரியை நிறுத்தி ஓட்டுநரிடம் விசாரணை நடத்தினர்.

ஓட்டுநரிடம் இருந்து ஆவணங்களை வாங்கி காவலாளர்கள் சரிபார்த்தனர். அப்போது மினி லாரியில் ஓட்டுநர் உள்பட மூன்று பேர் இருந்ததால் அவர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டது. அவர்களின் பதில் காவலாளர்களுக்கு திருப்திகரமானதாக இல்லையாம்.

இதனையடுத்து மினி லாரியை காவலாளர்கள் அதிரடியாக சோதனை நடத்தினர். இதில் காய்கறி மூட்டைகளுக்கு அடியில் வேறு மூட்டைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அந்த மூட்டைகளை காவலாளர்கள் பிரித்துப் பார்த்தபோது அதற்குள் தடைச் செய்யப்பட்டப் போதைப் பொருட்கள் இருந்தன.

இதனைத் தொடர்ந்து மினி லாரியில் இருந்த 1½ டன் எடையுள்ள போதைப் பொருட்களை காவலாளர்கள் பறிமுதல் செய்தனர். மேலும், அவற்றைக் கடத்திவந்த மினி லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றின் மொத்த மதிப்பு ரூ.10 இலட்சம் இருக்குமாம்.

இதுகுறித்து கூடலூர் காவலாளர்கள் வழக்குப் பதிந்து கேரள மாநிலம் மன்னார்காடு பகுதியைச் சேர்ந்த ஆஷிப் (38), ஷெபீன் (28), அப்துல்அசிஷ் ஆகிய மூவரை கைது செய்தனர்.

click me!