
தரமான கல்வி வசதிஇல்லாத சூழ்நிலையில் தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் தொடங்கப்பட வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகள் தொடங்க தமிழக அரசு 8 வாரங்களுக்குள் தடையில்ல சான்றிதழ்கள் வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
ஆனால் நவோதயா பள்ளிகள் தொடங்குவதற்கு திமுக, மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன.
இது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் , கிராமப்புறத்தில் தரமான, நவீன கல்வி வசதியில்லாத சூழலில் நவோதயா பள்ளிகள் தொடங்கப்படுவது மிகமிக அவசியமாகும் என குறிப்பிட்டுள்ளார்.
இந்த பள்ளியில் மாவட்டத்திற்கு 100 மாணவர்கள் தான் சேர்க்கப்படுகிறார்கள். இதில் சேர வேண்டும் என்பது கட்டாயமல்ல. விருப்பப்பட்டவர்கள் நவோதயா பள்ளிகளில் சேர்ந்து படிப்பதற்கான வாய்ப்பை தமிழக அரசு உருவாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இத்தகைய வாய்ப்பை மறுக்காமல் மதுரை உய்ர்நீதிமன்ற உத்தரவின்படி நவோதயா பள்ளிகளை உடனடியாக தொடங்குவதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் திருநாவுக்கரசர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்..