
கடலூர்
சிதம்பரம் நடராசர் கோவிலில் பொது தீட்சிதர்களின் தில்லை நாட்டிய அஞ்சலி டிரஸ்ட் சார்பில் வருகிற 13-ஆம் தேதி "நாட்டியாஞ்சலி" விழா தொடங்குகிறது. இந்த விழாவில் தமிழக ஆளுநர் பன்வாரிவால் புரோஹித் கலந்துகொண்டு உரையாற்றுகிறார்.
கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் உள்ள நடராசர் கோவில் "நாட்டியாஞ்சலி" விழா டாக்டர் கபிலா வாத்ஸ்யாயன், டாக்டர் ஆர்.நாகசாமி உள்ளிட்டோர் கொண்ட குழுவினரால் 1981-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
இந்த நாட்டியாஞ்சலி விழா 33 ஆண்டுகளாக நாட்டியாஞ்சலி அறக்கட்டளை மூலம் 2014-ஆம் ஆண்டு வரை சிறப்பாக நடத்தப்பட்டு வந்தது.
சிதம்பரம் நடராஜர் கோவிலை பொது தீட்சிதர்களே நிர்வகிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததை தொடர்ந்து, 2015-ஆம் ஆண்டு முதல் இந்தக் கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு நாட்டியாஞ்சலி, பரதநாட்டிய நிகழ்ச்சியை தில்லை நாட்டிய அஞ்சலி டிரஸ்ட் என்ற பெயரில் கோவில் பொது தீட்சிதர்களே கடந்த மூன்று ஆண்டுகளாக நடத்தி வருகின்றனர்.
இந்தாண்டு வருகிற 13-ஆம் தேதி மகா சிவராத்திரியன்று நாட்டியாஞ்சலி விழா தொடங்கி ஐந்து நாள்கள் நடைபெறுகிறது. தொடக்க நாளன்று சிவராத்திரியை முன்னிட்டு மாலை 4 மணிக்கு நாட்டியாஞ்சலி தொடங்கி மறுநாள் அதிகாலை 5 மணி வரை நடைபெறுகிறது. மற்ற நாள்களில் நாள்தோறும் மாலை 4.30 மணிக்கு தொடங்கி இரவு 11 மணி வரை நடைபெறுகிறது.
தொடக்க நாள் விழாவில் சிறப்பு விருந்தினராக பத்மபூஷன் பத்மா சுப்பிரமணியம் கலந்து கொண்டு பரதநாட்டியம் ஆடுகிறார். இந்த விழாவில் தமிழகம் மட்டுமன்றி வெளி மாநிலங்களில் இருந்தும், அமெரிக்கா, துபை, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலிருந்தும் நாட்டியக் கலைஞர்கள் கலந்து கொண்டு நாட்டியமாடுகின்றனர்.
நிறைவு விழாவில் நடைபெறும் 17-ஆம் தேதி தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கலந்துகொண்டு உரையாற்றுகிறார்.
டிரஸ்ட் தலைவர் எஸ்.வி.நவமணி தீட்சிதர், துணைத் தலைவர் எஸ்.சிவசங்கர தீட்சிதர், பொருளாளர் ஜெய.நடராஜமூர்த்தி தீட்சிதர், நிர்வாகிகள் ஆனந்த தாண்டவ தீட்சிதர்,
ஹோம.விஜயபால தீட்சிதர், ஜே.சிவசெல்வ தீட்சிதர், பொது தீட்சிதர்களின் செயலர் எஸ்.ராஜகணபதி தீட்சிதர், துணைச் செயலர் என்.ஆர்.சண்முக தீட்சிதர் ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.