
ஜல்லிக்கட்டு போட்டியை மீண்டும் தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி பீட்டா அமைப்பு, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
அந்த கடிதத்தில், '2017 ஆம் ஆண்டின், விலங்குகள் கொடுமைப்படுத்துதல் தடுப்பு சட்டத்தில் தமிழக அரசு கொண்டு வந்த திருத்தம் 23 மனிதர்கள் மற்றும் 6 காளைகளின் இறப்புக்குக் காரணமாகி விட்டது.
2008 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு நிகழ்வுகளில் 43 மனிதர்கள் மற்றும் 4 காளை மாடுகள் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டன. (இதில் அடிக்கடி நிகழும் காளைகளின் மரணச் செய்திகள் வெளியிடப்படாதவை, எனவே உண்மையான எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம்), மேலும் 5,000 பேர் காயமடைந்தனர், கிட்டத்தட்ட 3,000 பேர் படுகாயமடைந்தனர்.
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கியதால், இம்மாநிலத்தில் விலங்கு நலத்திற்கான பொதுவான அலட்சியம் அதிகரித்துள்ளது. இதுமட்டுமின்றி நரி ஜல்லிக்கட்டு மற்றும் ரேக்ளா ரேஸ் போன்ற சட்டவிரோத நிகழ்வுகளும் தொடர்ந்து நடைபெறுகின்றன.
நடந்தவரை போதும். ஜல்லிக்கட்டு விளையாட்டை நிறுத்த நடவடிக்கை எடுப்பதற்கு முன் எத்தனை மனிதர்கள் மற்றும் காளை மாடுகள் இறக்க வேண்டும்? உயர்ந்து வரும் இறப்பு எண்ணிக்கை இந்த நிகழ்வுகள் இயல்பாகவே கொடூரமானது மற்றும் அபாயகரமானவை என்பதை நிரூபிக்கின்றன. எந்தவிதக் கட்டுப்பாடுகளும் அதை மாற்ற முடியாது. 'பாரம்பரியம்' என அழைக்கப்படுவதை விட உயிர்களை மதிப்பிடும் நேரம் இதுதான்'' என்று அதில் கூறப்பட்டுள்ளது.
பல்வே நடவடிக்கைகளுக்குப் பிறகு தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி இந்த ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. மீண்டும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்கும் வகையில், பீட்டா அமைப்பு கடிதம் எழுதியிருப்பது, ஜல்லிக்கட்டுப்போட்டி தொடருமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.