
தட்டிவிடப்பட்ட சீட்டுக்கட்டை போல மளமளவென பல புதிர்களை, பல மர்மங்களை, பல திரைமறைவு மனிதர்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்து கொண்டே இருக்கிறது கொடநாடு கொலை மற்றும் கொள்ளை விவகாரம்.
ஜெயலலிதா இருந்தபோது அமெரிக்க ராணுவ தலையகமான பென்டகன் அளவுக்கு பாதுகாப்பு பில்ட் அப்புடன் இருந்த கொடநாடு பங்களா அவரது இறப்பிற்கு பின் கொலை, கொள்ளை என்று சீரழிகிறது.
இந்த மரணத்தின் விசாரணையின் போக்கில் பல விஷயங்கள் திரைமறைவில் இருந்து வெளிவர துவங்கியுள்ளன. கோடநாட்டில் சசியின் ஆதரவுடன் அதிகாரம் மிக்க மனிதராக வலம் வந்த சஜீவனின் முகம் வெளிப்பட்டது இந்த சம்பவத்துக்கு பிறகுதான். நடந்த சம்பவத்துடனான தொடர்பில் அவரது பெயரும் உருட்டப்பட, கேமெரா வெளிச்சத்துக்கு வந்தே தனக்கும் அதற்கும் தொடர்பில்லை என்பதை அவர் சொல்ல முடிந்தது. இதனால் சஜீவன் எனும் அதிகார பிம்பம் அ.தி.மு.க.வினர் மத்தியில் டல்லடிக்க துவங்கியுள்ளது எனலாம்.
அதேபோல் ஜெ., பங்களாவின் அமைவு, அங்கிருக்கும் வசதிகள் பற்றிய பல தகவல்கள் முன்பெல்லாம் கற்பனியிலும், கண்ணால் கண்டவர்கள் ஏற்றி இறக்கி தரும் விளக்கத்திலுமாகதான் உருவகப்பட்டுக் கொண்டிருந்தன. ஆனால் இப்போது மீடியாக்களின் கேமெரா கண்கள், கொடநாடு பங்களாவின் உள்ளே வரை நுழைந்து ஒளிப்பதிவு செய்து வெளியே வர துவங்கிவிட்டன.
இதுபோக ஜெ, சசிக்கு சொந்தமான பல்லாயிரம் ஏக்கர் தேயிலை எஸ்டேட்டில் இருந்து கொட்டும் வருமானங்களும், இன்னபிற பண போக்குவரத்துகளும் எஸ்டேட்டில் இருக்கும் அலுவலர்கள் வழியாக எம்.நடராஜனின் சகோதரர் ராமச்சந்திரனின் கவனத்துக்கே செல்கிறது என்று ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
எம்.நடராஜனையே சசிகலா ஒதுக்கி வைத்துவிட்டார் என்று ஜெ., இருக்கும் காலத்தில் சொல்லப்பட்டது, ஜெ., மறைவு சமயத்திலும் சசி வட்டாரத்திலிருந்து விலகி நின்றுதான் நடராஜன் பேட்டி கொடுத்தார். ஆனால் கொடநாடு பங்களாவின் வரவு, செலவுகளை நடராஜனின் தம்பிதான் கவனிக்கிறார் என்று இப்போது வரும் தகவல்கள் எம்.என். எந்த காலத்திலும் சசியின் தரப்பிலிருந்து தள்ளி இல்லையோ? இது ஜெ.,வுக்கு தெரியுமா தெரியாதா? என்றெல்லாம் பல கேள்விகள் இப்போது எழுந்துள்ளன.
ஆக தள்ளியெல்லாம் வைக்கப்படாமல் தள்ளி நின்று சசியை கவனித்துக் கொண்டும், இயக்கிக் கொண்டும்தான் எம்.என். இருந்தாரா? என்று அரசியல் விமர்சகர்கள் கேட்க துவங்கியுள்ளனர். அப்படியானால் எம்.என். ரகசியத்தை கொடநாடு நிகழ்வுகள் உடைத்துவிட்டன என்றுதான் பொருள்படுகிறது.
இதுபோக கொடநாடு எஸ்டேட் மற்றும் பங்களா நிர்வாகத்தில் நடராஜனின் தம்பியின் அதிகார அழுத்தம் இருக்கிறது எனும் நிலையில் நிகழ்ந்த சம்பவங்களை விசாரிக்கும் போக்கில் ராமச்சந்திரனையும் போலீஸ் அழைக்கலாம், அல்லது சந்திக்கலாம் என்றே பேச்சுகள் அடிபடுகின்றன. எம்.நடராஜனின் அதிகார வட்டம் எந்தளவுக்கு விரிந்திருக்கிறது என்பதை கண்டு போலீஸ் வட்டாரங்கள் அதிர்ந்துதான் போயுள்ளன.
எம்.என். சார் நீங்க ஒரு மாயமான் தான் சார்!