
சென்னை முகப்பேர் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள தனியார் நீச்சல் பயிற்சி மையத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த 8 வயது சிறுமி ஒருவர் பெற்றோர் முன்பு நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னை பாடி புதுநகரைச் சேர்ந்தவர் பிஜு என்பவர் தனது 8 வயது மகள் ஆண்ட்ரியாவை , முகப்பேர் கிழக்கில் உள்ள வி.வி. எனப்படும் தனியார் நீச்சல் பயிற்சி மையத்தில் கோடைகால பயிற்சி முகாமில் சேர்த்துவிட்டுள்ளார்.
இந்நிலையில் சிறுமி ஆண்ட்ரியாவுக்கு இன்று காலை சீதாராமன் என்பவர் நீச்சல் பயிற்சி அளித்துள்ளார். ஐந்தரை அடி ஆழமுள்ள நீச்சல் குளத்தில் ஆண்ட்ரியா, பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, திடீரென அவரது உடல் தளர்ந்து நீரில் மூழ்கினார்.
நீரில் மூழ்கிய சிறுமியை மீட்ட அவரது பெற்றோர், அண்ணா நகரில் உள்ள மருத்துவமனைக்கு சிறுமியை கொண்டுசென்றுள்ளனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து, நீச்சல் பயிற்சி மையத்தில் இருந்த சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், வி.வி. நீச்சல் பயிற்சி மைய உரிமையாளர் இளங்கோ, பயிற்சியாளர் சீதாராமன் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.