
பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே சாதிய மனப்பான்மை உள்ளது எனும் கசப்பான உண்மை நாங்குநேரி சம்பவம் மூலம் தெரியவந்துள்ளது. திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பெருந்தெருவைச் சேர்ந்த பட்டியலின மாணவரும், அவரது தங்கையும் வேறு சமூகத்தை சேர்ந்த சக மாணவர்களால் அரிவாளால் வெட்டப்பட்டுள்ளனர். படுகாயமடைந்த இருவரும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவத்தை பார்த்த அவர்களது உறவினர் கிருஷ்ணன் அதிர்ச்சியில் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக, அதே பள்ளியில் பிளஸ்-2 படிக்கும் மாணவர்கள் 3 பேர் உள்பட மொத்தம் 7 சிறுவர்கள் கைது செய்யப்பட்டு கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பாக 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாங்குநேரி சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு அரசு சார்பில், நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவை பாதிக்கப்பட்ட மாணவர் மற்றும் அவரது குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினார். பாதிக்கப்பட்ட மாணவரின் உயர் கல்விச் செலவு முழுவதையும் ஏற்றுக் கொள்வதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.
அமைச்சர் அன்பில் மகேஷ் உடல்நிலை எப்படி உள்ளது..? வெளியான மருத்துவ அறிக்கை
இந்த நிலையில், நாங்குநேரி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவருக்கும், அவரது தங்கைக்கும் விசிக தலைவர் திருமாவளவன் ஆறுதல் கூறியுள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவர்கள் இருவருக்கும் தொலைப்பேசி மூலம் திருமாவளவன் ஆறுதல் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பெருந்தெரு ஆதிராவிடர் குடியிருப்பிற்குள் ஆயுதங்களோடு புகுந்து பனிரெண்டாம் வகுப்பு மாணவன் மற்றும் அவனது தமக்கை ஆகியோர் மீது கொலைவெறித் தாக்குதல், உடன் படிக்கும் மாணவர்களால் நடத்தப்பட்டது. இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று காலை தொலைபேசி மூலமாக இருவருக்கும் ஆறுதல் கூறினேன்.” என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, இளைய சமுதாயத்தினரிடையே சாதி, இன உணர்வு பரவியிருப்பது எதிர்காலத் தமிழகத்தின் நலனுக்கு உகந்ததல்ல என தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், இது உடனடியாக சரி செய்யப்பட வேண்டிய ஒரு முக்கியமானப் பிரச்சினை என்பதால், இதில், அரசு எந்த வகையான நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பது குறித்தும், பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே சாதி, இனப் பிரிவினைகள் இல்லாத ஒரு சூழ்நிலையை உருவாக்கிட மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், அரசுக்கு ஆலோசனைகளை வழங்கிட ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் ஒரு நபர் குழு அமைத்து உத்தரவிட்டுள்ளார்.
இக்குழுவினர் கல்வியாளர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், சமூக சிந்தனையாளர்கள், பத்திரிகைத் துறையினர் என பல்வேறு தரப்பினரிடமிருந்தும் கருத்துகளைப் பெற்று அதனடிப்படையில் அரசுக்கு விரைவில் அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளனர்.