
Tamil Nadu municipal job scam : நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் பணம் 100க்கும் மேற்பட்டவர்களிடம் ஒரு பணிநியமனத்திற்கு 25 லட்சம் முதல் 35 லட்சம் ரூபாய் வரை லஞ்சம் பெற்று பணி நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக அமலாக்கத்துறை தமிழக காவல்துறைக்கு கடிதம் எழுதியுள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் பணம் பெற்றுக் கொண்டு தகுதியற்ற நபர்களைப் பணியில் அமர்த்தி ₹888 கோடி மோசடி நடந்துள்ளது திமுக ஆட்சியில் ஊழல் வேரூன்றி இருப்பதை வெளிப்படுத்துகிறது.
கடந்த 2024-ஆம் ஆண்டு 2,538 காலிப் பணியிடங்களுக்கு 1.12 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், தங்கள் சொந்த பாக்கெட்டுகளை நிரப்ப ஒரு காலிப் பணியிடத்திற்கு ₹35 லட்சம் வரை பணம் பெற்றுக் கொண்டு, தகுதியற்ற நபர்களைப் பணியமர்த்தி, பல்லாயிரக்கணக்கான திறமையான இளைஞர்களின் வேலைவாய்ப்பைப் பறித்துள்ளது திராவிட மாடல் அரசு. இரு மாதங்களுக்கு முன், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் சொந்தக் கரங்களால் பணியாணை வழங்கப்பட்ட பணித்தேர்விலேயே இத்தகைய முறைகேடு நடந்திருக்கும் நிலையில்,
கடந்த நான்கரை ஆண்டுகளில் இது போன்ற எத்தனை மோசடிகள் நடந்திருக்கும் என யோசிக்கையில் மலைக்க வைக்கிறது. காற்றில் தொடங்கி கழிவறை வரை ஊழல் செய்து தமிழகத்தின் கஜானாவைக் காலி செய்தது போதாதென்று, தற்போது நேர்மையான தமிழக இளைஞர்களின் எதிர்காலத்தை சூனியமாக்கி வரும் திமுக அரசின் ஊழல் மோகத்தை அடக்க சிபிஐ விசாரணை வேண்டும் என பாஜக சார்பாக வலியுறுத்துவதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.