நிறுத்தப்பட்ட நாகூர் - கொல்லம் பயணிகள் இரயிலை மீண்டும் இயக்க வேண்டும் - மக்கள் கோரிக்கை...

First Published Feb 1, 2018, 9:14 AM IST
Highlights
Nagore - Kollam passengers need to re-run the train - People request ...


நாகப்பட்டினம்

அகல இரயில் பாதை அமைப்பதற்காக நிறுத்தப்பட்ட நாகூர் - கொல்லம் பயணிகள் இரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என்று தென்னக இரயில்வே பொதுமேலாளரிடம், மக்கள் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

நாகப்பட்டினம், காரைக்கால், திருவாரூர் இரயில் நிலையங்களில் மேம்படுத்தப்பட்டுள்ள பணிகள் குறித்து நேற்று தென்னக இரயில்வே பொது மேலாளர் குல்ஸ்ரேஸ்தா ஆய்வு நடத்தினார்.

நாகப்பட்டினத்துக்கு தனி இரயிலில் வந்த பொது மேலாளரை, நாகப்பட்டினம் இரயில் நிலைய அதிகாரிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள், வர்த்தகர் சங்கத்தினர் வரவேற்றனர்.

பின்னர் நாகை இரயில் நிலையத்தில் பயணிகளுக்கு உரிய அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதா? என்று ஆய்வு நடத்தினார்.

பின்னர் இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியது: "இரயில் தண்டவாளம் உறுதி தன்மை, இரயில்வே மேம்பால கட்டுமான பணிகள் ஆய்வு செய்யப்பட்டன.

தற்போது இரயில் நிலையங்களில் நடைபெற்றுள்ள பணிகள் திருப்தி அளிப்பதாக உள்ளது. மேலும், மும்மத சுற்றுலா பயணிகளும் நாகப்பட்டினத்துக்கு அதிகளவில் வருவதால் திருச்சி  -  காரைக்கால் தண்டவாளம் தர ஆய்வு முடிந்ததும், நாகப்பட்டினம்  - வேளாங்கண்ணிக்கு கூடுதல் இரயில் இயக்குவதற்கு பரிசீலிக்கப்படும்" என்று அவர் கூறினார்.

அப்போது நாகப்பட்டினம் இரயில் நிலையம் அருகே உள்ள கீரைக்கொல்லை தெருவைச் சேர்ந்த மக்கள் கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் மதிவாணன் தலைமையில், பொதுமேலாளர் குல்ஸ்ரேஸ்தாவிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.

அதில், "எங்கள் தெருவிற்கு செல்ல இரயில்வே தண்ட வாளத்தை கடந்து செல்ல உள்ளது. இந்த இரயில்வே கேட் இரயில் நிலையம் அருகிலேயே உள்ளதால் அதிக நேரம் அடைத்தே வைக்கப்படுகிறது.

எனவே, இந்த இரயில்வே கேட்டை கடந்து செல்ல மேம்பாலம் அல்லது சுரங்க பாதை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு குழு சார்பில் ஒரு மனு அளிக்கப்பட்டது. அதில், "காரைக்கால் - திருச்சிக்கு கூடுதல் இரயில்கள் இயக்க வேண்டும்.

அகல இரயில் பாதை அமைப்பதற்காக நிறுத்தப்பட்ட நாகூர் - கொல்லம் பயணிகள் இரயிலை மீண்டும் இயக்க வேண்டும்.

வெளிப்பாளையம் இரயில் நிலைய நடைமேடையை உயர்த்துவதுடன், அந்த இரயில் நிலையத்தை மேம்படுத்த வேண்டும்" என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த ஆய்வின்போது, திருச்சி இரயில்வே செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மனோரஞ்சன், நாகப்பட்டினம் இரயில்வே நிலைய கண்காணிப்பாளர் சிவக்குமார் மற்றும் இரயில்வே அதிகாரிகள் உடன் இருந்தனர்.

click me!