
கிருஷ்ணகிரி
பிப்ரவரி 1 (அதாவது இன்று)நடைபெற இருந்த வார்டு மறுவரையறை கருத்துருக்கள் மீதான மண்டல அளவிலான கூட்டம் பிப்ரவரி 10-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது என்று கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் நேற்று செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், "கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மூன்றடுக்கு ஊரக உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மறுவரையறை செய்யப்பட்டது.
அந்த வரைவு வார்டு கருத்துகள் மக்களின் பார்வைக்குக் கடந்த 27.12.2017 அன்று வெளியிடப்பட்டது.
வரைவு வார்டு மறுவரையறை கருத்துருக்கள் மீதான ஆட்சேபனைகள் மற்றும் கருத்துருக்கள் அளிக்க எழுத்து மூலமாக கடந்த 12-ஆம் தேதி மாலை வரை கால அவகாசம் வழங்கப்பட்டது.
மேலும், கடந்த 5-ஆம் தேதி மாவட்ட அளவில் மக்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகளிடம் கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து, மாவட்டத்தில் வரைவு வார்டு மறுவரையறை கருத்துருக்கள் மீது அரசியல் கட்சி பிரதிநிதிகள், மக்கள் ஆகியோரிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டன.
அந்த மனுக்கள் குறித்து பரிசீலிக்க பிப்ரவரி 1-ஆம் தேதி, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் வரைவு வார்டு மறுவரையறை குறித்து ஆட்சேபனைகள், கருத்துகள் மீது இறுதி செய்வது தொடர்பான மண்டல அளவிலான கூட்டம் நடைபெறுவதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், தற்போது அந்தக் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்தக் கூட்டமானது பிப்ரவரி 10-ஆம் தேதி, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.
இந்தக் கூட்டத்தில், கடந்த 12-ஆம் தேதி மாலை வரையில் எழுத்து பூர்வமாக மனுக்களாக அளித்த அரசியல் கட்சி பிரதிநிதிகள், மக்கள் மட்டும் பங்கேற்று தங்களின் கருத்துக்களை தெரிவிக்கலாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.