
நாகை மாவட்டத்தில் உள்ள அரசுத் துறை அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களில் குடியரசு தின விழா மற்றும் கலை நிகழ்ச்சிகள் நேற்று வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
நாகை மீன்வளப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில் பல்கலைக்கழகத் துணைவேந்தர் (பொறுப்பு) கு. ரத்னகுமார் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். பின்னர், மாணவ, மாணவிகள் நடத்திய கலை நிகழ்ச்சிகளும் அரங்கேறின.
மீன்வளப் பொறியியல் கல்லூரி முதல்வர் சி. பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இறுதியில் தேசிய ஒருமைப்பாடு உறுதிமொழியும் எடுத்தனர்.
பாப்பாக்கோவில் சர் ஐசக் நியூட்டன் கல்லூரியில் நடைபெற்ற விழாவுக்கு சர் ஐசக் நியூட்டன் கல்வி நிறுவனங்களின் தாளாளர் த. ஆனந்த் தலைமை வகித்தார்.
அரிமா சங்கங்களின் பொறுப்பாளர் எஸ். வீரபாண்டியன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
கல்வி நிறுவன செயலர் த. மகேஸ்வரன் மற்றும் விரிவுரையாளர்கள், அலுவலர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற விழாவில், கட்சியின் மீனவர் பிரிவு மாநில அமைப்பாளர் ராஜேந்திர நாட்டார் தேசியக் கொடி ஏற்றினார். சிறுபான்மைப் பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளர் நவ்சாத், மாவட்ட விவசாய பிரிவு தலைவர் ராமலிங்கம் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில், கட்சியின் மாவட்டச் செயலர் எம். செல்வராசு தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
திருமருகல் தீயணைப்பு நிலையத்தில் நடைபெற்ற விழாவில் நிலைய அலுவலர் இளங்கோவன் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். திட்டச்சேரி பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலர் பொன்னுசாமி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
இதேபோல், திருமருகல் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், காவல் நிலையம், வட்டார வேளாண்மை விரிவாக்க மைய அலுவலகம், கால்நடை மருத்துவமனை, உதவித் தொடக்கக் கல்வி அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.