
காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்ட கொள்ளையன் நாதுராமின் மனைவி மஞ்சு ராஜஸ்தான் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
சென்னை கொளத்தூரில் நடைபெற்ற கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையனை பிடிக்க சென்ற போது பெரியபாண்டியன் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
பெரியபாண்டியை சுட்டது யார் என்பது குறித்து மர்மம் நீடித்துக்கொண்டே வருகிறது. ராஜஸ்தான் போலீசார் நடத்திய விசாரணையில் பெரியபாண்டியன் உடலில் இருந்த குண்டு உடன் சென்ற முனிசேகர் துப்பாக்கியில் இருந்தது தான் எனவும் முனிசேகர் தவறுதலாக சுட்டதால் தான் பெரியபாண்டி உயிரிழந்ததாகவும் ராஜஸ்தான் போலீஸ் தகவல் தெரிவித்திருந்தது.
இதையடுத்து சில நாட்களுக்கு முன்னர் கொள்ளையன் நாதுராமின் கூட்டாளிகள் மற்றும் உறவினர்கள் சிலரை ராஜஸ்தான் போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் நாதுராமின் மனைவி மஞ்சு ராஜஸ்தான் போலீசாரிடம் பரபரப்பு தகவல்களை வெளியிட்டுள்ளார்.
இந்தியில் பேசிக்கொண்டு 4 பேர் கதவை தட்டி மிரட்டினர். அவர்கள் உள்ளூர் வாசிகள் இல்லை என தெரிந்தவுடன் நாங்கள் அவர்களை கற்கள் மற்றும் இரும்பு கம்பியால் தாக்கினோம். பின்னர் வந்தவர்களில் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் இந்தியில் பேசியவர் ரத்த வெள்ளத்தில் கீழே கிடந்தார். இதனையடுத்து அந்த இடத்திலிருந்து நாங்கள் தப்பித்து சென்றோம் என வாக்குமூலம் அளித்துள்ளார்.