தமிழ்நாட்டு பால் கொள்முதலில் குஜராத் ‘அமுல்’ நிறுவனம் நுழைவதைத் தடுத்து நிறுத்துவதோடு, தற்சார்பு திட்டங்கள் மூலம் ஆவின் நிறுவனத்தையும் திமுக அரசு வலுப்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார் சீமான்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “குஜராத் மாநில அரசின் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பின் கீழ் இயங்கும் நிறுவனம், தமிழ்நாட்டில் பால் திட்டமிட்டிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. தமிழ்நாடு அரசின் ஆவின் பால் நிறுவன கொள்முதல் எல்லையை, வேற்று மாநில நிறுவனம் அபகரிப்பதென்பது மாநில சுயாட்சிக்கு எதிரான அத்துமீறலாகும்.
இந்தியாவின் முன்னணி பால் பொருட்கள் உற்பத்தி நிறுவனமான அமுல் (Anand Milk Producers Union limited - AMUL) தமிழ்நாட்டில் தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் பால் கொள்முதல் செய்யும் நோக்குடன் பால் உற்பத்தியாளர்களை அணுகியுள்ளது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல. ஒவ்வொரு மாநிலமும் பால் கூட்டுறவுச் சங்கங்களின் மூலம் தமக்கென சொந்தமாகப் பால் பொருட்கள் உற்பத்தி நிறுவனத்தை வைத்துள்ள நிலையில், அதன் கொள்முதல் எல்லைக்குள் வேற்று மாநில நிறுவனங்கள் வியாபார தந்திரத்துடன் அத்துமீறி நுழைவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
பாலின் சந்தை மதிப்பு இந்தியாவில் மட்டும் 15 இலட்சம் கோடியாக உள்ளது. ஒன்றிரண்டு இலட்சம் கோடி முதலீட்டுக்காக, பன்னாட்டுப் பெருநிறுவனங்கள் பலவற்றை அழைத்து வந்து, நிலம், நீர், மின்சாரம், மனித ஆற்றல் என அனைத்தையும் குறைந்த விலைக்குக் கொடுத்து, அதன் மூலம் பெறப்படும் இலாபத்தைவிட, பன்மடங்கு அதிக லாபத்தை பால் உற்பத்தியின் மூலம் பெறமுடியும் என்று நான் பல ஆண்டுகளாக அறிவுறுத்தி வருகிறேன்.
ஆனால், அதனைச் சிறிதும் உணராது, மண்ணிற்கும், மக்களுக்கும் தீங்கு விளைவிக்கும் அந்நிய பெருநிறுவனங்களை முதலீடு செய்ய அழைப்பு விடுப்பதற்காக நேரடியாக வெளிநாடு சென்றுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் ஐயா மு.க.ஸ்டாலின் அவர்கள், அங்கிருந்தபடி தமிழ்நாடு அரசின் சொந்த நிறுவனமான 'ஆவினை' காப்பாற்ற வேண்டி இந்திய ஒன்றிய உள்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதும் நிலைக்கு ஆளாகியுள்ளது மிகவும் பரிதாபகரமானது.
வேளாண்மையை அடிப்படையாகக் கொண்ட தற்சார்பு பசுமை பொருளாதாரத்தைக் கைவிட்டு, அந்நிய முதலீடுகளை ஈர்க்க பன்னாட்டுப் பெருமுதலாளிகளை சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கும் திராவிட அரசுகளின் தவறான பொருளாதாரக் கொள்கையே, அரசு பால் நிறுவனமான ஆவினைக்கூட காப்பாற்ற முடியாத அவலநிலைக்குத் தள்ளப்பட முதன்மையானக் காரணமாகும்.
தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மொத்த பால் உற்பத்தியில் வெறும் 16% மட்டுமே ஆவின் நிறுவனம் கொள்முதல் செய்யும் நிலையில், மீதமுள்ள 84% பால் உற்பத்தியை தனியார் நிறுவனங்களே கொள்முதல் செய்கின்றன. பால் உற்பத்தியாளர்களுக்கு உரிய கொள்முதல் விலையைக் கொடுக்காதது, பால் விற்பனை விலையை அதிகரித்து மக்களை வாட்டி வதைத்தது, அனைத்து மக்களுக்கும் கிடைக்கும் வகையில் பால் கொள்முதலை அதிகரிக்காதது, ஈ விழுந்த பால், தண்ணீர் கலந்த பால், எடை குறைவான பால், தரமற்ற பால், பதப்படுத்தும் இயந்திரங்கள் வாங்கியதில் ஊழல் என பல காரணங்களும் இருக்கிறது.
இதையும் படிங்க..அன்று 20 வயது.. இன்று 97! இவருக்கும், சோழ ஆட்சியின் செங்கோலுக்கும் இப்படியொரு சம்பந்தமா.!!
மேலும் ஊழியர்களை நியமித்ததில் ஊழல் என்று இரு திராவிடக் கட்சிகளின் ஆட்சிகளிலும் ஆவின் நிறுவனத்தில் நடைபெற்ற கட்டுக்கடங்காத ஊழலே ஆவின் நிறுவனம் நட்டத்தில் இயங்கும் நிலைக்குத் தள்ளியுள்ளதுடன், தற்போது வேற்று மாநில நிறுவனம் உள்நுழையவும் வாய்ப்பேற்படுத்தியுள்ளது. ஏற்கனவே, தனியார் பால் நிறுவனங்களைக் கட்டுப்படுத்தும் அதிகாரத்தை மாநில அரசுகளிடமிருந்து இந்திய ஒன்றிய அரசு பறித்துக்கொண்டுள்ள நிலையில், தமிழ்நாடு அரசின் ஆவின் 27-05-2023 பால் நிறுவனமும் முடங்கினால், ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு பால் உணவு என்பதே பகற்கனவாகிவிடும்.
எனவே தமிழ்நாடு அரசு இனியாவது விழித்துக்கொண்டு வெளிநாட்டு முதலாளிகளை வரவேற்று சந்தைப் பொருளாதாரத்தை அதிகரிக்கும் தரகு வேலைப் பார்ப்பதை விடுத்து, வேளாண்மைக்கும், கால்நடை வளர்ப்புக்கும் முக்கியத்துவம் அளிக்கும் தற்சார்பு பசுமை பொருளாதாரத்தை முன்னெடுக்கும் திட்டங்களை தீவிரமாக வகுத்துச் செயல்பட வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.
அதுமட்டுமின்றி, தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மொத்த பால் உற்பத்தியில் 50% பாலினை தமிழ்நாடு அரசே கொள்முதல் செய்வதுடன், அந்நிய நிறுவனங்கள் நுழைவதைத் தடுக்க மண்ணின் மைந்தர்களாகிய பால் உற்பத்தியாளர்களுக்கும், முகவர்களுக்கும் உரியத் தொகையினை வழங்கவும் தமிழ்நாடு அரசு முன்வர வேண்டுமெனவும் கோருகிறேன். மேலும், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் இவ்விடயத்தில் வெறும் லாப நோக்கத்தை மட்டுமே கருத்திற்கொள்ளமல், தமிழ்நாட்டின் உரிமை பறிபோகும் பேராபாத்தினை உணர்ந்து, ஆவின் நிறுவனத்திற்கு மட்டுமே பால் விற்பனை செய்வோம் என ஒற்றுமையுடன் உறுதியான முடிவெடுத்து தமிழ்நாடு அரசிற்கு துணைநிற்க வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன்.
ஆகவே, குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த அமுல் நிறுவனம் தமிழ்நாட்டில் பால் கொள்முதல் செய்யும் முயற்சியை இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு கைவிட செய்ய வேண்டுமென வலியுறுத்துகிறேன். மேலும், அமுல் நிறுவனம் நுழைவதை அரசியல் மற்றும் சட்டப்போராட்டத்தின் மூலம் தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்துவதோடு, தற்சார்பு பொருளாதார திட்டங்களை முன்னெடுத்து, பால் உற்பத்தியைப் பன்மடங்கு அதிகரிப்பதே ஆவின் நிறுவனத்தை பாதுகாப்பதற்கான நிரந்தர தீர்வாக அமையும் என்றும் அறிவுறுத்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க..தமிழன்டா.. தமிழுக்கு பெருமை சேர்த்த மோடி! ‘மகிழ்ச்சி’ ரஜினி ஸ்டைலில் பதில் சொன்ன பிரதமர் மோடி