
விருதுநகர்
டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டதால், டாஸ்மாக் ஊழியர்களுக்கு மாற்றுப்பணி வழங்க வேண்டி போராட்டம் நடத்துவது என்று விருதுநகரில் நடந்த டாஸ்மாக் ஊழியர் சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது.
விருதுநகர் மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்கத்தின் குழு கூட்டம் விருதுநகரில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் வேல்முருகன் தலைமை வகித்தார். சி.ஐ.டி.யூ மாவட்ட செயலாளர் தேவா மற்றும் சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
மாவட்ட பொதுச் செயலாளர் குணசேகரன் வேலை அறிக்கை சமர்ப்பித்தார்.
இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
“டாஸ்மாக் மாநில சம்மேளனத்தின் 4–வது மாநில மாநாட்டு முடிவின் அடிப்படையில் தமிழகத்தில் மூடப்பட்ட, மூடப்பட உள்ள டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும், பணிபுரிந்த ஊழியர்களுக்கு அரசின் பிற துறைகளில் நிரந்தர மாற்றுப்பணி வழங்கக் கோரி விருதுநகரில் உள்ள ஆட்சியர் அலுவலகம் முன்பு வருகிற 15–ஆம் தேதி காலை 10 மணிக்கு கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடத்துவது,
ஏப்ரல் 4–ஆம் தேதி சி.ஐ.டி.யூ சங்கம் நடத்தும் சென்னை கோட்டை முற்றுகை போராட்டத்தில் திரளாக பங்கேற்பது,
டாஸ்மாக் ஊழியர்களுக்கு நிரந்தரப் பணி ஆணை வழங்க மாவட்ட தொழிலாளர் ஆய்வாளர் முன்னிலையில் பணி நிரந்தர வழக்கு தொடுப்பது”
போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முடிவில் மாவட்ட பொருளாளர் ராஜபாண்டி நன்றி கூறினார். இக்கூட்டத்தில் சங்க உறுப்பினர்கள் ஏராளமானோர் திரளாக கலந்து கொண்டனர்.