வரலாற்றில் முத்துராமலிங்கத் தேவரின் நீண்ட பயணம்; எதற்கு இவ்வளவு முக்கியத்தும்?

Published : Oct 29, 2022, 12:28 PM ISTUpdated : Oct 29, 2022, 12:42 PM IST
வரலாற்றில் முத்துராமலிங்கத் தேவரின் நீண்ட பயணம்; எதற்கு இவ்வளவு முக்கியத்தும்?

சுருக்கம்

ஆண்டுதோறும் அக்டோபர் 30ஆம் தேதி தேவர் ஜெயந்தி விழா தமிழ்நாட்டில் மிகவும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. நாளை மதுரையில் இருக்கும் தேவர் சிலைக்கு அரசியல் தலைவர்கள் மாலை அணிவிக்க உள்ளனர். இதை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் சுமார் 10,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 

அக்டோபர் 30, 1908 இல் பிறந்த பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஒரு சுதந்திரப் போராட்ட வீரரும் கூட. இவரது பெற்றோர் உக்கிரபாண்டி தேவர், இந்திராணி அம்மையார். இவர்களுக்கு முத்துராமலிங்கத் தேவர் ஒரே மகனாவார். இவரது சிறு வயதில் தாய் இறந்துவிட கல்லுப்பட்டி கிராமத்தில் பாட்டியிடம் வளர்ந்து வந்தார். இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு இந்திய அரசியல்வாதியும் ஆவார். மூன்று முறை, அவர் நாடாளுமன்றத் தொகுதிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் உள்ள தேவர் சமூகத்தினர் முத்துராமலிங்கத் தேவர் பிறந்த நாளான அக்டோபர் 30 ஆம் தேதியை தேவர் ஜெயந்தியாக அனுசரிக்கின்றனர்.

ஜூன் 6, 1939 ஆம் ஆண்டு தனது தந்தையின் மறைவுக்கு முன், முத்துராமலிங்கத் தேவர் குடும்ப சொத்து வழக்கு தொடர்பாக சென்னைக்கு சென்றார். அங்கு இவருக்கு நன்கு தெரிந்த காங்கிரஸ்காரரும் மதிப்புமிக்க வழக்கறிஞருமான சீனிவாசனை சந்தித்தார். பின்னர் அகில இந்திய காங்கிரஸ் கூட்டத்திற்கு முத்துராமலிங்க தேவர் சென்றார். சுதந்திரப் போராட்ட வீரர் சுபாஷ் சந்திரபோஸ் உரை இவரை மிகவும் ஈர்த்தது. சீனிவாசனின் பரபரப்பான உரையும் இவரை கட்டிப் போட்டது. இதன் விளைவாக, முத்துராமலிங்கத் தேவரும் சுதந்திரப் போராட்டத்தில் முழுமையாக ஈடுபடும் முடிவை எடுத்தார். இங்குதான் அவரது அரசியல் வாழ்க்கை துவங்கியது. மேலும், இந்தியாவை விடுவிப்பதற்காக தனது உடைமைகளையும் தனது வாழ்க்கையையும் அர்ப்பணித்தார். இதற்குப் பின்னர், அவர் ஆடம்பரமான ஆடைகளை அணிவதை நிறுத்தினார். முழுவதுமாக கதர் உடையை விரும்பி, தன்னை ஒரு காங்கிரஸ் உறுப்பினராக காட்டிக் கொண்டார்.

முத்துராமலிங்கத்தேவர் தங்க கவசம் விவகாரம்.. ராமநாதபுரம் டி.ஆர்.ஓ வசம் ஒப்படைப்பு

முத்துராமலிங்கத் தேவர் பல சமூக சீர்திருத்தங்களில் முக்கியப் பங்காற்றினார். 1920 ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்களால் நிறைவேற்றப்பட்ட குற்றவியல் பழங்குடியினர் சட்டம் (CTA)அவரது வாழ்க்கையில் ஒரு குறிப்பிடத்தக்க திருப்புமுனையாக அமைந்தது. முக்குலத்தோர் சமூகத்திற்கு எதிராக கொண்டு வரப்பட்ட சட்டத்தை எதிர்த்தார். மக்களை திரட்டி பேரணி நடத்தி பதிலளித்தார். 1946 ஆம் ஆண்டு தொடர்ச்சியான முயற்சிகளுக்குப் பிறகு சட்டம் ரத்து செய்யப்படுவதில் முக்கிய பங்கு வகித்தார்.

வழக்கறிஞர் சீனிவாசனின் வீட்டில் வசித்தபோது, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் தேசப்பற்று குறித்து நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அறிந்து கொண்டார். இறுதியில், தேவரால் ஈர்க்கப்பட்ட போஸ், அவரை கல்கத்தாவில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று தாயிடம் அறிமுகம் செய்து வைத்தார். 

காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறிய சுபாஷ் சந்திர போஸ் பார்வர்ட் பிளாக்கை நிறுவினார். அனைத்து இடதுசாரி சக்திகளையும் காங்கிரஸுக்குள் ஒரே அமைப்பாக ஒருங்கிணைப்பதற்கு அழுத்தம் கொடுத்தார். அப்போது போஸூக்கு ஆதரவாக தேவர் இருந்தார்.

கிரிமினல் பழங்குடியினர் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான அதிகாரப்பூர்வ காங்கிரஸ் தலைமையின் முடிவால் விரக்தியடைந்த தேவர் பார்வர்டு பிளாக்கில் சேர்ந்தார். 1939 ஆம் ஆண்டு பார்வர்ட் பிளாக் உருவாக்கப்பட்ட சிறிது காலத்திலேயே, மதுரைக்கு போஸின் வருகையின் போது, செப்டம்பர் 6 ஆம் தேதி சிறப்பான வரவேற்பை தேவர் அளித்து இருந்தார். அதைத் தொடர்ந்து, முத்துராமலிங்க தேவர் 1952 ஆம் ஆண்டு முதல் அகில இந்திய பார்வர்டு பிளாக்கின் (AIFB) தேசிய துணைத் தலைவராக பணியாற்றினார்.

தென் தமிழகப் பகுதியில் பெரும்பான்மையாக உள்ள அரசியல் கட்சிகளின் ஆதரவைப் பெறுவதற்கு, தேர்தலின் போது தேவர் சிலைக்கு மரியாதை செலுத்துவது வழக்கமாக இருந்து வருகிறது. 

முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழா.. இந்த முறையும் பசும்பொன்னுக்கு செல்லாத இபிஎஸ்..!

தமிழ்நாடு தலித் குழுவான பள்ளர் சமூகத்தின் சார்பில் நடைபெற்ற மாநாட்டில் இம்மானுவேல் சேகரன் கலந்து கொள்வதை முத்துராமலிங்கத் தேவர் எதிர்த்ததாக கூறப்பட்டது. பள்ளர்களுக்காக சேகரால் பேச முடியாது என்று தேவர் கூறினார். முதுகுளத்தூர் ரிசர்வ் தொகுதியின் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட  எம்எல்ஏ பெருமாள் மட்டுமே பள்ளர் சமூகத்தின் ஒரே பிரதிநிதி என்று கூறினார். இந்த நிலையில், மறுநாள் பரமக்குடி ரயில் நிலையம் அருகே இம்மானுவேல் இறந்து கிடந்தார். தலித சமுதாயத்தின் விடுதலைக்காக பாடுபட்டவர் என்று அடையாளம் காணப்பட்டவர் இம்மானுவேல்.

தமிழ்நாட்டின் கிழக்கு ராமநாதபுரம் மாவட்டத்தில் 1957 ஆம் ஆண்டு ஜாதி வன்முறை பயங்கரமாக வெடித்தது. தமிழக சட்டமன்றத்தில் இருந்து முத்துராமலிங்கத் தேவர் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து ஜூலை 1-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. அவரது பார்வர்டு பிளாக் கட்சி உறுப்பினர்களுக்கும், காங்கிரஸ் உறுப்பினர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. மாவட்டத்தில் பெரிய அளவில்  வன்முறை வெடித்தது. இதன் விளைவாக ஏராளமான கொலைகள் நடந்தன. வீடுகளுக்கு தீவைக்கப்பட்டன. 

இதையடுத்து, பள்ளர் சமூகத்தின் மீதான தேவர் சமுதாயத்தினரின் தாக்குதல்கள் பரவியதாக கூறப்பட்டது.  ராமநாதபுரம் மாவட்டத்தில் போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் வன்முறை வெடித்தது. உடனே, முத்துராமலிங்கத் தேவர் தடுப்புக் காவல் சட்டத்தின் (1950) கீழ் கைது செய்யப்பட்டார். பின்னர், தேவரை விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. 

வரலாற்றில் பதிந்த இந்தப் பகுதிகள்தான் இன்றும் நினைவு கூறப்படுகிறது. ராமநாதபுரத்தில் முத்துராமலிங்கத் தேவர் மற்றும் இம்மானுவேல் சேகரன் ஆகியோரின் நினைவு நாளில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு ஏற்படாமல் இருப்பதற்காக 144 தடை உத்தரவு ஒவ்வொரு ஆண்டும் விதிக்கப்படுகிறது. ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். 

செப்டம்பர் 11, 2011 அன்று, இம்மானுவேல் சேகரனின் 54வது நினைவு தினத்தை முன்னிட்டு பரமக்குடியில் திரண்டிருந்த 6 தலித்துகள் காவல்துறையினரால் கொல்லப்பட்டனர். முன்னதாக, அதே நாளில், தலித் தலைவர் ஜான் பாண்டியனை வல்லநாடு கிராமம் அருகே போலீஸார் கைது செய்து, அடையாளம் தெரியாத இடத்திற்கு அழைத்துச் சென்றனர். பரமக்குடியில் சுமார் 200 தலித்துகள் இந்த கைதை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எங்கு ஜான் பாண்டியன் தங்க வைக்கப்பட்டு இருக்கிறார் என்பது தெரிய வேண்டும் என்று கோரிக்கை வைத்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் ஆறு தலித்துகள் கொல்லப்பட்டனர்,
 
இது மட்டுமின்றி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் தலித்துகள் செல்வதற்கு முத்துராமலிங்கத் தேவர் உதவியாக இருந்தார். மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்துக்குள் தலித்களை அழைத்துச் செல்ல வைத்தியநாதய்யர் முடிவு செய்தார். ஆனால் எங்குப் பார்த்தாலும் எதிர்ப்பு கிளம்பியது. என் சகோதரர்களான தலித் மக்கள் அம்மனை வழிபட்டு வீடு திரும்பும் வரை எனது மக்கள் அனைத்து வகையான பாதுகாப்புகளையும் வழங்குவார்கள் என்று முத்துராமலிங்கத் தேவர் கூறினார். இதையடுத்து, ஆலயப் பிரவேசம் 1939 ஆம் ஆண்டு, ஜூலை மாதம், 8ஆம் தேதி அமைதியான வழியில் நடந்தது. 

தமிழக அரசியல் வரலாற்றில் இன்றும் தேவரின் பிறந்த நாள் முக்கிய இடம் வகிக்கிறது. முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி முதல் ஜெயலலிதா வரை முத்துராமலிங்கத் தேவருக்கு முக்கியத்துவம் அளித்து வந்தனர். மறைந்த திமுக தலைவர் கருணாநிதி, மதுரை கோரிப்பாளையம் சந்திப்பில் முத்துராமலிங்கத் தேவருக்கு சிலை வைத்தார். அவரது சொந்த ஊரான பசும்பொன்னில், மறைந்த தலைவருக்கு கருணாநிதி நினைவிடம் கட்டினார். 1994-ம் ஆண்டு மறைந்த முதல்வர் ஜெயலலிதா முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு 13.5 கிலோ தூய தங்கக் கவசத்தை வழங்கினார். இன்றும் தேவரின் நினைவு நாளில் அவருக்கு சிறப்பாக பூஜைகள் செய்யப்பட்டு, தங்க கவசம் அணிவிக்கப்படுகிறது. 

PREV
DG
About the Author

Dhanalakshmi G

செய்தித்தாள், டிஜிட்டல் என்று 25 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கைத்துறையில் அனுபவம் பெற்றவர். தினமலர், தினமணி, டைம்ஸ் இன்டர்நெட் ஆகியவற்றில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். கோயம்புத்தூரில் இருக்கும் பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் எம்.ஏ., இதழியல் பட்டம் பெற்றவர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட தருணத்தில் மாணவ பத்திரிக்கையாளராக தினமலரில் இருந்து சென்று இருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக செய்திகளை சமர்ப்பித்தவர். தற்போது ஏஷியா நெட் நியூஸ் தமிழ் டிஜிட்டல் மீடியாவில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். Digital technology புரிந்து கொண்டு பணியாற்றுவதில் ஆர்வம் உள்ளவர். கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் துறையில் பணியாற்றி வருகிறார். சமூக அக்கறை கொண்ட விழிப்புணர்வு சார்ந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். Explained, Opinion செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.Read More...
click me!

Recommended Stories

தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர். பணியைக் கண்காணிக்க சிறப்பு பார்வையாளர்கள் நியமனம்!
எமர்ஜென்சி எக்ஸிட்..! விஜய் கூட்டத்திற்கு முன்னேற்பாடு.. கலக்கும் புதுவை பெண் போலீஸ் அதிகாரி