
புதுக்கோட்டை
புதுக்கோட்டையில் ஆற்று மணல் திருட்டுக்கு பயன்படுத்தியதால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அன்னவாசல், இலுப்பூர் பகுதிகளில் வழக்குகளில் சிக்கி பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதனால் வாகனங்கள் காவல் நிலையத்தின் வாசலில் படைவீரர்களை போல அணிவகுத்து நின்றுக் கொண்டிருக்கின்றன.
மணல் கொள்ளைக்குப் பயன்படுத்தப்பட்டதால் பறிமுதல் செய்யப்பட்ட மாட்டு வண்டிகள், லாரிகள், டிராக்டர்கள், சரக்கு ஆட்டோக்கள், பொக்லைன் இயந்திரங்கள் போன்றவை கூட காவல் நிலையங்களை அலங்கரித்துக் கொண்டிருக்கின்றன.
இதுகுறித்து அன்னவாசல், இலுப்பூர் மக்கள் கூறியது:
புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிகபட்சமாக அன்னவாசல், இலுப்பூர் பகுதிகளில் உள்ள ஆற்றுப் பகுதிகளில் மணல் அதிகளவு திருடப்படுகிறது. இதற்காக வருவாய் கோட்டாட்சியர் முதல் வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் வரை எந்த நேரத்திலும் சம்பந்தப்பட்ட இடத்திற்குச் சென்று ஆய்வில் ஈடுபட்டு வாகனங்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.
இப்படி பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள் மேல் நடவடிக்கைக்காக அந்தந்தப் பகுதிகளின் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்படுகின்றன. அப்படி ஒப்படைக்கப்படும் வாகனங்கள் காவல் நிலையத்தில் வரிசையாக நிறுத்தப்பட்டுள்ளன.
முறையான ஆவணங்கள் இருந்தால் மட்டுமே அந்த வாகனங்களை உரிய அபராத தொகையை கட்டி ஒரு சில நாட்களில் எடுத்து சென்று விடுகின்றனர். ஆனால், சரியான ஆவணங்கள் இல்லாத வாகனங்களை எடுத்துச் செல்ல ஆர்வம் காட்டாமல் அதன் உரிமையாளர்கள் நாட்களை கடத்துகின்றனர். இதனால் அன்னவாசல், இலுப்பூர் போலீஸ் நிலையங்களில் இது போன்ற வழக்குகளில் சிக்கியுள்ள வாகனங்கள் அணி வகுத்து நிற்கின்றன.
எனவே, உரிய அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுத்து வாகனங்களை உரிமையாளர்களிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.