முருகபாரதி, 20 ஆண்டுகளுக்கும் மேலாக மனிதவளப் பயிற்சி அளித்து, சமூக சேவையில் ஈடுபட்டு வருகிறார். 'நீதான்' என்ற அமைப்பின் மூலம் இளைஞர்களை ஊக்குவித்து, கல்வி, நிவாரணப் பணிகள் போன்றவற்றில் ஈடுபடுத்தி வருகிறார். தன்னைப் பின்பற்றுபவர்களின் செயல்களால் சமூக மாற்றத்தைக் காண்கிறார்.
டெல்லி, டிசம்பர் 18: ஒருவருக்கு உதவி செய்து, பிரதிபலனாக, அவரை மூவருக்கு உதவச் சொல்லும் மையக் கருத்துடன், பிரபலமானது “ஸ்டாலின்” எனும் தெலுங்குத் திரைப்படம். அதுபோல், தன் பேச்சால், செயலால் நல்லெண்ணங்களை விதைத்து வரும் ஒருவர், தன்னால் ஈர்க்கப்பட்டவர்களின் நற்செயல்கள், இன்னொரு தொடர் சங்கிலியை உருவாக்குவது கண்டு உள்ளம் மகிழ்கிறார்.
தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டை நகரில் பிறந்து, அங்கேயே வாழ்பவர், முருகபாரதி (44). கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொழில் நிறுவனங்களில், மனித வளப் பயிற்சிகளை வழங்கி வருகிறார். பள்ளி, கல்லூரிகளில் ஊக்குவிப்புப் பேச்சாளராகவும் வலம் வருகிறார். கல்வியில் மிகுந்த நாட்டம் கொண்டு, 9 பட்டப் படிப்புகளையும், பல சான்றிதழ் பயிற்சிகளையும் முடித்துள்ளார். அறிவு என்பது, தான் வளம் சேர்க்க என்பதைக் கடந்து, பிறர் நலம் காக்கப் பயன்பட வேண்டும் என்பதை, உறுதியாக செயல்படுத்தி வருகிறார்.
undefined
சாதி மத வேறுபாடு இல்லை:
பள்ளியில், மூன்றாம் வகுப்பு படிக்கும்போதே, சக மாணவர்கள் தங்களுக்குள் மதிய உணவைப் பகிர்ந்துண்ணும் திட்டத்தைத் தொடங்கிப் பல ஆண்டுகள் செயல்படுத்தினார். இப்போதும், தன் நண்பர்கள் மற்றும் மாணவர்களோடு, சாதி மத வேறுபாடின்றி, ஒரே தட்டில் பகிர்ந்துண்ணும் வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்கிறார். இவருடைய செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்ட பல மாணவர்கள், அவசியம் ஏற்பட்டால், நண்பர்களுடன் ஒரே தட்டில் உண்ணத் தயங்குவதில்லை. தன்னிடம் பயிற்சி பெற்று, இப்போதும் தொடர்பில் உள்ள ஏராளமான மாணவர்கள், என்ன சாதி என்று தனக்கும் தெரியாது, அவர்களுக்கு இடையேயும் அது பற்றிய சிந்தனை இருப்பதில்லை என்று பெருமைபடக் கூறுகிறார்.
இது போன்ற பல நல்ல குணங்கள், தன் பயிற்சிகளில் பங்கேற்றவர்கள் மூலம், அடுத்த தலைமுறைக்கும் கடத்தப்படுவதைக் கண்டு, மனம் நெகிழ்கிறார். 2006-ஆம் ஆண்டு, முருகபாரதியிடம் ஒரு பயிற்சி வகுப்பில் இணைந்தவர், அப்துல். அப்போது, பயிற்சி நிறுவனம் சார்பில் முன்னெடுக்கப்படும் சேவைத் திட்டங்களில், ஈடுபடுவார். வளர்ந்து, திருமணமாகி, தற்போது வெளிநாட்டில் பணி செய்கிறார். யுகேஜி படிக்கும் அப்துலின் குழந்தை திப்பு சுல்தான், தான் சேர்த்து வைத்த உண்டியல் பணத்தை, சமீபத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க விரும்பியுள்ளார். இது போன்று, இவருடைய மாணவர்கள் பலரும், தங்கள் குழந்தைகளிடம் நற்பண்புகளை வளர்ப்பது கண்டு, பெருமிதம் அடைவதாகக் குறிப்பிடுகிறார்.
2 லட்சம் பேர்:
இதுவரை, சுமார் 2 லட்சம் பேர், முருகபாரதியின் உரைகளை, நேரடியாகக் கேட்டுப் பயன் பெற்றுள்ளனர். இவர் எழுதியுள்ள புத்தகங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாகவும் பல்லாயிரம் பேரைச் சென்றடைந்துள்ளார். இவர்களில், சில நூறு பேராவது, ஆண்டுகள் கடந்தும் தொடர்பில் உள்ளனர். அவர்களில் 12 பேரைத் தேர்வு செய்து இணைத்து, “நீதான்” என்ற பெயரிலான ஒரு அமைப்பை, 2020-ஆம் ஆண்டு அக்டோபர் 15 முதல் நடத்தி வருகிறார். தன் காலத்தோடு தன் சேவைகள் முடிந்துவிடாமல், இளைய தலைமுறையை வழி நடத்துகிறார்.
சராசரியாக 30 வயதைக் கொண்ட “நீதான்” அமைப்பின் உறுப்பினர்கள், தங்கள் மாத வருமானத்தில் இருந்து, குறிப்பிட்ட சதவீதத்தை, சமூக சேவைகளுக்காக வழங்கும் பழக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். கோவிட் தொற்றுநோய் தீவிரமாக இருந்த காலத்தில், தமிழ்நாட்டின் 6 மாவட்டங்களில், நீதான் அமைப்பினர் நிவாரணப் பணிகளை மேற்கொண்டனர். ஒரு அரசுப் பள்ளியில், மாற்றுத் திறனாளிகளுக்கான தனிக் கழிப்பறை கட்டிக் கொடுத்துள்ளனர். மரக் கன்றுகள் நடுதல், இரத்த தானம் போன்ற சேவைகளை செய்து வந்தாலும், கல்வி தொடர்பான சேவைகளிலேயே கவனம் செலுத்துகின்றனர்.
'நீதான்' அமைப்பு:
இந்த “நீதான்” அமைப்பினரின் உதவி பெற்று, மேற்கல்வி பயின்ற பவித்ரா எனும் பெண், அவருக்குப் பணி கிடைத்ததும், “நீதான்” உறுப்பினர்களைப் போல, தன் மாத வருமானத்தில் ஒரு தொகையை, சமூக சேவைகளுக்கு வழங்கி வருகிறார் என்பதில் நெகிழ்ந்து நிற்கிறார், முருகபாரதி. எல்லோரும் எளிமையான உதவிகளை இயல்பாக்கி விட்டால், சமூகத்தில் உதவி கோர யாருமே இல்லாத உயர்ந்த நிலை உருவாகிவிடும் என்று கனவு காண்கிறார்.
இப்படித் தொடர்ந்து நல்ல எண்ணங்களை செல்லுமிடமெல்லாம் விதைத்து வருவதோடு, ஊடகங்களில் வெளியாகும் நேர்மறையான, நம்பிக்கை ஊட்டும் சமீபத்திய செய்திகளைத் தொகுத்து, தானே வடிவமைத்து, “நல்ல செய்தி” என்ற பெயரில் மின்னிதழாக, வாரந்தோறும் இலவசமாக வெளியிட்டு வருகிறார். நான்காவது ஆண்டில் நடைபோடும் இந்த மின்னிதழ் பணியையும், தனக்குப் பிறகு, தன் பயிற்சியில் ஊக்கம் பெற்ற யாராவது தொடர்வார்கள் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்.
தனக்கென ஏதும் சேர்த்து வைத்துக் கொள்ளாமல், நற்பணிகளுக்கே செலவழிக்கிறார்.
15 ஆண்டுகாலம் நடத்திய தன் தொழில் நிறுவனத்தையும், தனக்கு உறவில்லாத ஒருவருக்கு வழங்கி விட்டார். இதனால் ஈர்க்கப்பட்ட சிலர், அவர்களிடம் பணியாற்றும் நபர்கள் புதிய தொழில் தொடங்க உதவி செய்துள்ளனர். முருகபாரதி, சமீபத்தில் தொடங்கியுள்ள “பேசவை” என்ற நிறுவனத்திற்கும், செல்வக்குமார், சிவநந்தினி, ராகவேந்திரன் எனும் மூன்று இளைஞர்களை உரிமையாளர் ஆக்கிவிட்டார். திருமணம் கூட செய்து கொள்ளாமல், சமூகத்திற்காகத் தன் வாழ்வை அர்ப்பணித்துள்ளார். தன்னிடம் பயிற்சி பெறுபவர்களையே, தன் பிள்ளைகளாக ஏற்கிறார்.
உண்மையான விருது:
2010-ஆம் ஆண்டு, தன்னிடம் பயிற்சி பெற்று, தற்போது வரை உறவாக உள்ள, அருண் பிரசாத் என்ற இளைஞரையே, தன் வாரிசாக அறிவித்துள்ளார். தன் பெற்றோருக்குப் பிறகு, தன்னைப் பின்பற்றும் இளைஞர்களையே அதிகம் நேசிக்கிறார். சுமார் 2000 நிகழ்வுகளில் பங்கேற்று இருந்தாலும், தன் மாணவர் அறிவொளி என்பவர் தலைமை ஏற்று நடத்தும் நிறுவனத்தின் சார்பில் விருந்தினராக அழைக்கப்பட்டதையே பெருமையாக நினைக்கிறார்.
பல விருதுகளைப் பெற்று இருந்தாலும், தன் மாணவர் முத்துக்குமரன் (பிக் பாஸ் புகழ்) என்பவர், அவர் நடத்திய தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் வழங்கிய, “மகத்தான மனிதர்” என்ற விருதை எண்ணியே பெருமை கொள்கிறார். நேர்மை, ஒழுக்கம் மற்றும் கொடை போன்ற உயர்ந்த பண்புகளை மேடையில் மட்டும் பேசாமல், தானும் கடைப்பிடித்து, தன் வார்த்தைகளுக்கும் வாழ்க்கைக்கும் இடைவெளி இல்லாமல், முன்னுதாரண மனிதராக வாழ்கிறார்.