
தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு தலைவர் பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட விசாரணை கைதியை, கோர்ட்டில் ஆஜர்படுத்த அழைத்து சென்றபோது, மர்மநபர்கள் சரமாரியாக வெட்டி கொலை செய்தனா. பட்டப்பகலில் நடந்த இந்த பயங்கர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு தலைவர் பசுபதி பாண்டியன் கொலை வழக்கில், தூத்துக்குடியை சேர்ந்த சிங்காரம் என்பவரை போலீசார் கைது செய்தனர். இவர் மீது ஏற்கனவே கொலை, கொலை முயற்சி உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில், கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சிங்காரத்தை, போலீசார், விசாரணைக்காக கடந்த 2 நாட்களுக்கு முன் அழைத்து சென்றனர். விசாரணை முடிந்து நெல்லை கேடிசி நகர் கோர்ட்டில் ஆஜர்படுத்த இன்று காலை வேனில் அழைத்து சென்றனர்.
கேடிசி நகர் நான்கு வழி சாலையில் போலீஸ் வாகன ம் சென்று கொண்டிருந்தபோது, திடீரென ஒரு கும்பல் வழி மறித்தது. பின்னர், வாகனத்தில் இருந்த போலீசார் மீது மிளகாய்ப் பொடியை தூவினர். இதனால், போலீசார் திணறினர். போலீஸ் வாகனத்தை அந்த கும்பல் அடித்து நொறுக்கியது.
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த சிங்காரம், போலீஸ் வாகனத்தில் இருந்து குதித்து தப்பியோடினார். அப்போது, சாலையோரத்தில் பொதுமக்கள் போல நின்றிருந்த சிலர், மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து சரமாரியாக வெட்டினர்.
அவர்களிடம் தப்பியோடிய சிங்காரத்தை விடாமல் விரட்டி சென்று தலை, கை, கால், முதுகு என உடல் முழுவதும் அரிவாளால் வெட்டின்ர். இதில் நிலை குலைந்த அவர், ரத்த வெள்ளத்தில் ரோட்டில் விழுந்தார். சிறிது நேரத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இச்சம்பவத்தை பார்த்த்தும், அங்கிருந்த பொதுமக்கள் அலறியடித்து கொண்டு ஓடினர். இதனால், அங்கு பரபரப்பு நிலவியது. போர்க்களம் போல் காட்சியளித்தது.
தகவலறிந்து நெல்லை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். இந்த கொலை பசுபதி பாண்டியன் ஆதரவார்கள் செய்தார்களா, அல்லது சிங்காரம் மீதுள்ள வேறு கொலை வழக்கில் கொல்லப்பட்டாரா என விசாரிக்கின்றனர்.