பயிர் கடனில் நிலுவைத் தொகை பிடித்தம் செய்வதை தற்காலிகமாக நிறுத்த வேண்டும் - வங்கி உறுப்பினர்கள் கோரிக்கை…

 
Published : Feb 24, 2017, 10:51 AM ISTUpdated : Sep 19, 2018, 01:39 AM IST
பயிர் கடனில் நிலுவைத் தொகை பிடித்தம் செய்வதை தற்காலிகமாக நிறுத்த வேண்டும் - வங்கி உறுப்பினர்கள் கோரிக்கை…

சுருக்கம்

மஞ்சூர்;

நீலகிரியில், பயிர் கடனில், நிலுவை தொகையை வசூல் செய்வதையும், ஜாமின் போட்டவர்களின் தொகையில் பிடித்தம் செய்வதையும் தற்காலிகமாக நிறுத்த வேண்டும். என வங்கி உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஊட்டியில் செயல்பட்டு வரும் மத்திய கூட்டுறவு வங்கி தலைமை அலுவலகத்தின் கீழ், குந்தா, குன்னுார், அருவங்காடு, எல்லநள்ளி, எம்.பாலாடா, கோத்தகிரி, கூடலுார், பந்தலுார் உள்ளிட்ட பகுதிகளில் கூட்டுறவு வங்கி கிளை அலுவலகங்கள் செயல்படுகின்றன.

இதில், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வங்கியில் கணக்கு வைத்துள்ளனர். 500-க்கும் மேற்பட்ட மகளிர் குழுக்களும் வங்கியில் கணக்கு துவக்கி கடன் பெற்று மாத தவணையில் செலுத்தி வருகின்றனர். தொழில் செய்யும் வியாபாரிகளும் கடன் பெற்றுள்ளனர்.

இந்த வங்கிகளில், கடன் பெற்றவர்களின் நிலுவை தொகை மட்டும், வட்டியுடன், 2 கோடி அளவுக்கு வசூலாகாமல் உள்ளது.

மாவட்டத்தில் கடந்தாண்டு ஜனவரி மாதத்திலிருந்து டிசம்பர் மாதம் வரையில் போதிய மழை பெய்யவில்லை. மழை இல்லாமல் தேயிலை மகசூல் அடியோடு குறைந்தது. இதை நம்பியுள்ள மகளிர் குழுக்கள் வேலை வாய்ப்புகளை இழந்து வங்கியில் பெற்ற மகளிர் கடனை சரிவர செலுத்த முடியவில்லை.

நீலகிரி மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்தாலும், தேயிலை விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்க வழியில்லை. அதனால், விவசாயிகள் மிகவும் மோசமான சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், மாவட்டத்தில் உள்ள, 74 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், 60 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். உறுப்பினர்களுக்காக மொத்தம், ரூ.150 கோடி பயிர் கடனாக ஒதுக்கப்பட்டுள்ளது.

உறுப்பினர்களின் விண்ணப்பங்களை பரிசீலித்து தற்போது வங்கிகளில் கடன் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த பல ஆண்டுகளாக பயிர் கடன் பெறும் உறுப்பினர்கள், அந்தந்த கடன் சங்கங்களில், கடன் தொகைகளை பெற்று வந்தனர்.

தற்போது, அதில் மாற்றம் செய்யப்பட்டு, அப்பகுதியில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கி கிளையில் கடனை பெற வேண்டும் என்று அறிவித்துள்ளது மத்திய அரசு.

இந்த சூழ்நிலையில், மத்திய கூட்டுறவு வங்கியில் கடன் பெற்ற மகளிர் குழுக்கள், விவசாயிகள் பயின் கடன் பெற செல்லும் போது, அவர்கள் கடந்த காலங்களில் பெற்ற கடன் நிலுவை தொகையில், கணக்கு பார்த்து, அதனை பிடித்தம் செய்வதாகவும், பிறருக்கு ஜாமின் போட்டிருந்தால், அவர்களுக்கான தொகையையும் பிடித்தம் செய்யப்படுகிறது. இதனால், தற்போது, விவசாயம் செய்ய உள்ள பலரும் பாதிக்கப்படுகின்றனர்.

இதுகுறித்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க உறுப்பினர் ரமேஷ் கூறியது:

“கடந்த சில ஆண்டுகளாக ஏற்பட்ட வறட்சி காரணமாக, வங்கியில் பெற்ற கடனை முறையாக செலுத்த முடியவில்லை. இந்த நிலையில், தற்போது விவசாயிகளின் நலன் கருதி பயிர் கடனில், நிலுவை தொகையை வசூல் செய்வதையும், ஜாமின் போட்டவர்களின் தொகையில் பிடித்தம் செய்வதையும், தற்காலிகமாக நிறுத்தி கொள்ள மாவட்ட ஆட்சியர் உத்தரவிட வேண்டும். மழை பெய்த பின்பு, வரும் நாட்களில் அதற்கான தொகையை கட்ட விவசாயிகளுக்கு அறிவுறுத்த வேண்டும்” என்றுத் தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

புத்தாண்டில் மழை அடிச்சு தும்சம் செய்யப்போகுதாம்.. குளிரும் நடுநடுங்க வைக்குப்போகுதாம்.. பொதுமக்களே உஷார்!
திமுகவுக்கு பேரிடி... அதிமுகவுக்கு சவுக்கடி..! கூட்டணி பலமானால் விஜயே முதல்வர்..! அதிரடி சர்வே..!