எதிரெதிரே வந்த மோட்டார் சைக்கிள்கள் நேருக்குநேர் மோதல்; இருவர் பலி; மூவர் பலத்த காயம்...

First Published Jul 2, 2018, 11:08 AM IST
Highlights
motorcycles Face-to-face collision Two died on sport Three heavy Injury ...


விழுப்புரம்

விழுப்புரத்தில் மோட்டார் சைக்கிள்களில் எதிரெதிரே வந்தவர்கள் நேருக்குநேர் மோதி கொண்டதில் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்கள். மூவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே ஆசூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நாராயணசாமி மகன் கோபாலகிருஷ்ணன் (30). கொத்தனாரான இவர் நேற்று காலை தனது மனைவி இலட்சுமி (28), மகள் யுவராணி (4) ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் நொளம்பூரில் உள்ள அம்மன் கோயிலுக்கு சாமி கும்பிட சென்றிருந்தார். 

சாமி கும்பிட்டுவிட்டு அங்கிருந்து மனைவி, மகளுடன் மதியம் தனது மோட்டார் சைக்கிளில் கோபாலகிருஷ்ணன் மீண்டும் சொந்த ஊருக்கு புறப்பட்டார்.

திண்டிவனம் அடுத்த கீழ்கூடலூர் ஏரிக்கரை சாலை வளைவில் திரும்பியபோது, எதிரே வந்த மோட்டார் சைக்கிளும், கோபாலகிருஷ்ணன் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதின. 

இதில், கோபாலகிருஷ்ணன் மற்றும் எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த நொளம்பூர் இந்திரா நகரைச் சேர்ந்த வெங்கடேஷ் மகன் விக்னேஷ் (22) என்பவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 

இதில், இலட்சுமி, யுவராணி மற்றும் விக்னேஷுடன் வந்த அவரது நண்பர் நொளம்பூரைச் சேர்ந்த ரஜினி மகன் ராஜசேகர் (18) ஆகிய மூவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. 

இதனைப் பார்த்த அந்த வழியாக வந்தவர்கள் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிய அந்த மூவரையும் மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த இலட்சுமி, அவரது மகள் யுவராணி ஆகியோர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். 

திண்டிவனம் அரசு மருத்துவமனையில் ராஜசேகருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே விபத்து பற்றி தகவல் அறிந்த ஒலக்கூர் காவலாளர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கோபாலகிருஷ்ணன், விக்னேஷ் ஆகியோரின் உடல்களை மீட்டு உடற்கூராய்வுக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து வழக்குப்பதிந்த காவலாளர்கள் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

click me!