
திருவள்ளூர்
திருவள்ளூரில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 80-க்கும் மேற்பட்ட இளம்பெண்கள் மாயமாகியுள்ளதால் பெற்றோர்கள் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர். இதுகுறித்து மக்கள் பயப்பட வேண்டாம் என்று காவல் கண்காணிப்பாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம், செவ்வாப்பேட்டை தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் சீனிவாசனின் மகள் சாருலதா (19). பாலிடெக்னிக்கில் பட்டயம் முடித்துவிட்டு கடந்த சில மாதங்களாக குத்தம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு வேலைக்குச் செல்வதாக கூறிச் சென்றார். அதைத் தொடர்ந்து இரவு நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.
அதனைத் தொடர்ந்து சீனிவாசன், உற்றார் உறவினர் வீடுகளிலும் தேடியும் கிடைக்காததால் இது தொடர்பாக செவ்வாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இதேபோல், திருத்தணியை அடுத்த சின்ன கடம்பூர் மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஹரிபாபுவின் மகள் தேவி (27). இவர் கடந்த 22-ஆம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்ற நிலையில் வீடு திரும்பவில்லை.
திருத்தணியைச் சேர்ந்தவர் சுபாஷினி (18). இவர் திருத்தணியில் உள்ள தமிழ்நாடு பாரா மெடிக்கல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு கல்லூரிக்குச் செல்வதாக கூறிச் சென்ற இவர் இதுவரையில் வீடு திரும்பவில்லை.
கனகம்மாசத்திரத்தை அடுத்த தோமூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சரண்யா (22). திருப்பாச்சூரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். கடந்த 24-ஆம் தேதி கல்லூரிக்கு சென்ற இவர் வீடு திரும்பவில்லை.
இச்சம்பவங்கள் குறித்து அந்தந்த பகுதி காவல் நிலையங்களில் பெற்றோர்கள் புகார் அளித்துள்ளனர். இவ்வாறு கடந்த ஒரு மாதத்தில் மட்டும் திருவள்ளூர் மாவட்டத்தில், 80-க்கும் மேற்பட்ட இளம்பெண்கள், கல்லூரி மாணவிகள் மாயமாகியுள்ளனர்.
இது தொடர்பாக காவல் நிலையங்களிலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் மாயமாகும் இளம் பெண்கள் காதல் வயப்பட்டுச் சென்றார்களா? வேறு யாராவது கடத்திச் சென்றுள்ளார்களா? என்று பல்வேறு கோணங்களில் காவலாளர்கள் தீவிர விசாரணையில் ஈடுபட்டு உள்ளனர்.
இந்த நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி நேற்று செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டார்.
அதில், "திருவள்ளூர் மாவட்டத்தில் நிகழாண்டில் அதிகளவில் இளம்பெண்கள் காணாமல் போவதாகவும், மாயமாகி வருவதாகவும் கடந்த சில நாள்களாக சமூக ஊடகங்களிலும், இணையதளங்களிலும் பரவி வருகிறது. இதனால், மக்கள் பீதியடைந்து வருகின்றனர்.
இதில் கடந்த ஜனவரி முதல் இதுவரை திருவள்ளூர் காவல் மாவட்டத்தில் இளம்பெண்கள் காணாமல் போனதாக மொத்தம் 40 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில், 34 வழக்குகள் தீர்வு காணப்பட்டுள்ளன.
நிலுவையில் உள்ள 6 வழக்குகளில் விரைந்து தீர்வுகாண அந்தந்தப் பகுதி துணைக் கண்காணிப்பாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 18 வயதுக்கு மேல் உள்ளவர்களை இந்த வழக்குகளில் சேர்க்கக் கூடாது.
இது குறித்து காவல் நிலையங்களிலேயே விசாரணை மேற்கொண்டு கண்டுபிடிப்பார்கள். இதற்காக ஒவ்வொரு காவல் நிலையத்திலும் பிரத்யேகமாக காவலர் ஒருவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவர், காணாமல் போன இளம்பெண்களின் பெற்றோர்களுடன் தொடர்பில் இருந்து ஆலோசனை வழங்குவார்.
அதோடு, ஒவ்வொரு காவல் நிலைய எல்லையிலும் உள்ள கிராமங்களில் மக்கள் - காவலாளர்கள் நல்லுறவுக் கூட்டம் நடத்தி அதன்மூலம் இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
எனவே, சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் பரவி வரும் தவறான தகவல்களைக் கண்டு மக்கள் அச்சம் கொள்ளவேண்டாம்" என்று அதில் கேட்டுக் கொண்டுள்ளார்.