
திருப்பூர்
திருப்பூரில் 100-க்கும் மேற்பட்டவர்கள் குடிநீர் வசதி கேட்டு வெற்றுக் குடங்களுடன் ஆட்சியர் அலுவலகத்துக்கு திரண்டு வந்து ஆட்சியரிடம் மனு கொடுத்து முறையிட்டனர்.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அதிகாரி பிரசன்னா ராமசாமி முன்னிலை வகித்தார். இந்தக் கூட்டத்தில் மக்கள் தங்கள் குறைகளை மனுக்கள் மூலமாக தெரிவித்தனர்.
அதன்படி, திருப்பூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வள்ளிபுரம் ஊராட்சியில் உள்ள அம்மா பசுமை நகர்-1 குடியிருப்போர் நல சங்கத்தின் சார்பில் 100-க்கும் மேற்பட்டவர்கள் குடிநீர் வசதி கேட்டு வெற்றுக் குடங்களுடன் ஆட்சியர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர்.
பின்னர் அவர்கள் ஆட்சியரிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில், "கைத்தறி நெசவாளர்களுக்கு அரசின் பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் 374 பேருக்கு வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டது. 3 ஆண்டுகளுக்கு மேலாக இங்கு வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் குடிநீர், தெருவிளக்கு, சாலை மற்றும் சாக்கடை கால்வாய் வசதி உள்ளிட்டவை இல்லை.
பொதுக்குழாய் மூலம் குடிநீர் வழங்கப்பட்டது. ஆனால் கடந்த சில மாதங்களாக குழாய்களில் குடிநீர் வருவது இல்லை. இதனால் பணம் கொடுத்து லாரிகள் மூலமாக குடிநீர் பெற்று பயன்படுத்தி வருகிறோம். எனவே, எங்கள் பகுதியில் குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்" என்று அந்த மனுவில் அவர்கள் கூறியிருந்தனர்.
இந்தக் கூட்டத்தில் மொத்தம் 240 மனுக்கள் பெறப்பட்டு அந்த மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள ஆட்சியர் உத்தரவிட்டார்.
இக்கூட்டத்தில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் சார்பில் 5 பேருக்கு ரூ.95 ஆயிரம் மதிப்பில் முதல்-அமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்ட இயற்கை மரண நிவாரண தொகைக்கான உத்தரவை ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி வழங்கினார்.