
திருவாரூர்
திருவாரூரில் 200-க்கும் மேற்பட்ட காவலாளர்கள் தலைக்கவசம் அணிந்து பேரணியில் ஈடுபட்டு இருசக்கர வாகனம் ஓட்டிகளுக்கு தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவத்தை விளக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
திருவாரூரில் காவல்துறை சார்பில் தலைக்கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நேற்று நடைப்பெற்றது.
இந்தப் பேரணியை திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் தொடங்கி வைத்தார். பின்னர், சாலைப் பாதுகாப்பு தொடர்பான வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை, இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு மயில்வாகனன் வழங்கினார்.
திருவாரூர் புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கிய பேரணியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட காவலாளர்கள், தலைக்கவசம் அணிந்து கலந்து கொண்டனர்.
இந்தப் பேரணி, புதிய பேருந்து நிலையம், பனகல் சாலை, தெற்கு வீதி, துர்காலயா சாலை வழியாக தேசிய நெடுஞ்சாலையை அடைந்து, மீண்டும் இரயில் நிலையத்திற்கு வந்தது.
அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன், "தலைக் கவசத்தின் அவசியம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த விழிப்புணர்வு பேரணி நடத்தப்படுகிறது.
திருவாரூர் மாவட்டத்தில் கடந்தாண்டு 91 பேர் விபத்தில் இறந்துள்ளனர். எவ்வளவு எச்சரிக்கையுடன் வண்டியை இயக்கினாலும், சில நேரங்களில் விபத்துகள் ஏற்பட்டு விடுகின்றன. அந்த நேரத்தில் தலைக்கவசம் அணிந்திருந்தால், உயிரிழப்பு குறைவதோடு, விபத்தின் பாதிப்பும் குறையும்.
எனவே, தலைக்கவசம் அணிவதை கலாச்சாரமாக மாற்ற வேண்டும். தலைக்கவசம் அணிவதால் நாம் பாதுகாக்கப்படுவதோடு, நம்மை நம்பியிருக்கும் நமது குடும்பங்களும் பாதுகாக்கப்படுகின்றன என்பதை வாகன ஓட்டிகள் உணர வேண்டும்" என்று பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் ஏடிஎஸ்பி ஜான் ஜோசப், திருவாரூர் டிஎஸ்பி சுகுமாறன், வட்டார போக்குவரத்து அலுவலர் செந்தில்குமார் மற்றும் போலீஸார், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் பங்கேற்றனர்.