
வேலூர்
வேலூரில் குடிநீர் கேட்டு 100-க்கும் மேற்பட்ட மக்கள் வெற்றுக் குடங்களுடன் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதாலும், பேச்சுவார்த்தைக்கு வந்த காவலாளர்களை முற்றுகையிட்டதாலும் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர் மாவட்டம், நெமிலி ஊராட்சி ஒன்றியம், காட்டுப்பாக்கம் ஊராட்சியில் உள்ள எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் 400-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்தப் பகுதியில் கடந்த சில மாதங்களாக குடிநீர் சரியாக வினியோகம் செய்யப்படவில்லை. இதுகுறித்து மக்கள் ஊராட்சி நிர்வாகம், நெமிலி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர். ஆனால், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் பொறுமையிழந்த மக்கள் 100-க்கும் மேற்பட்ட மக்கள் வெற்றுக் குடங்களுடன் நேற்று காலை நெமிலியில் இருந்து பாணாவரம் செல்லும் சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் பாணாவரம் காவல் ஆய்வாளர் மகாலிங்கம் மற்றும் காவலாளர்கள் சம்பவ இடத்துக்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது மக்கள், காவலாளர்களை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது சாலை மறியலில் ஈடுபட்டவர்கள், "எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் புதிதாக இரண்டு ஆழ்துளை கிணறு அமைக்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தனர்.
அதற்கு காவலாளர்கள், "உங்கள் கோரிக்கையை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்" என்று உறுதி அளித்தனர்.
அதனைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் அந்த பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.