
திருவண்ணாமலை
திருவண்ணாமலையில் மோட்டார் சைக்கிள் மீது படுவேகமாக கார் மோதியதில் ஒருவர் உடல் நசுங்கி நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொருவர் பலத்த காயத்தோடு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலத்தை அடுத்த அணுக்குமலை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜானகிராமன் மகன் குபேந்திரன். வேட்டவலத்தை அடுத்த கீழ்கரிப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன்.
இவர்கள் இருவரும் திருவண்ணாமலையில் இருந்து வேட்டவலம் நோக்கி கடந்த ஞாயிற்றுக்கிழமை மோட்டார் சைக்கிளில் சென்றுக் கொண்டிருந்தனர்.
வேட்டவலத்தை அடுத்த ஆவூர் பகுதியில் சென்றுக் கொண்டிருந்தனர். அப்போது, எதிரே, புதுச்சேரியில் இருந்து திருவண்ணாமலை நோக்கி கார் ஒன்று வந்துக் கொண்டிருந்தது.
அந்த கார், மோட்டார் சைக்கிள் மீது படுவேகமாக மோதியது. இதில் நிகழ்விடத்திலேயே உடல் நசுங்கி குபேந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். வெங்கடேசன் பலத்த காயமடைந்தார்.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்து அங்கு கூடிய மக்கள், வெங்கடேசனை மீட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
பின்னர், இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டபின் நிகழ்விடத்துக்கு வந்த வேட்டவலம் காவலாளர்கள் விபத்து பற்றி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.